டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றும் பொருட்டு ஊவா மாகாணத்தின் பசறை தமிழ் மகா வித்தியலாத்தில் (தேசிய பாடாசலை) உடற்கல்வி ஆசிரியையாக கடமையாற்றும் மாரிமுத்து அகல்யா ஜப்பான் பயணமானார்.
ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றுவதற்கு தெரிவாகியுள்ள முதலாவது இலங்கை தமிழர், குறிப்பாக மலையகத் தமிழர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் இதன் மூலம் அகல்யா உரித்தானார்.
தேசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா உட்பட சர்வதேச பட்மின்டன் போட்டிகள் பலவற்றில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றியுள்ள தனக்கு ஒலிம்பிக்கில் கடமையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதைப் பெரும் பாக்கியமாக கருதுவதாக அகல்யாக குறிப்பிட்டார்.
ஆசிய பட்மின்டன் சம்மேளனத்தினால் 2012 இல் நடத்தப்பட்ட பட்மின்டன் மத்தியஸ்தர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான பரீட்சைக்கு தோற்றிய அகல்யா, இரண்டாவது அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்று சித்தி அடைந்து ஏ தரச் சான்றிதழைப் பெற்றார்.
உள்ளக மற்றும் சர்வதேச போட்டிகள் பலவற்றில் மத்தியஸ்தராகவும் தொழில்நுட்ப அதிகாரியாகவும் கடமையாற்றிவந்த அகல்யா, சீனாவின் வுஹான் நகரில் 2017 இல் நடைபெற்ற ஆசிய பட்மின்டன் சம்பியன்ஷிப் போட்டியில் முதல் தடவையாக தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றினார்.
பட்மின்டனுக்கு புகழ்பெற்ற மலேசியாவில் அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய அணிநிலை பட்மின்டன் போட்டிகளிலும் தொழில்நுட்ப அதிகாரியாக அவர் கடமையாற்றியிருந்தார்.
அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து, கோல்ட் கோஸ்ட் நகரில் 2018 இல் நடைபெற்ற 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் தொழில்நுட்ப அதிகாரியாகக் கடமையாற்றி வரலாற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து சீனாவின் குவாங்ஸூவில் 2019 இல் நடைபெற்ற எச்எஸ்பிசி உலக பட்மின்டன் வேர்ல்ட் டுவர் போட்டியிலும் உலக பட்மின்டன் சம்மேளனத்தினால் நியமிக்கப்பட்டு தொழில்நுட்ப அதிகாரியாக அகல்யா பணியாற்றியிருந்தார்.
ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக அகல்யா நியமிக்கப்பட்டுள்ளமையானது அவரது வாழ்க்கையில் பதிவான மிகப்பெரிய சாதனையாக அமைகின்றது.
ஒலிம்பிக்கில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றுவதற்கு தெரிவான அகல்யாவை மலையக கல்வி அபிவிருத்தி மன்ற போஷகர்கள், தலைவர் உட்பட நிருவாக உத்தியோகத்தர்கள் பாராட்டி, உதவித் தொகையும் வழங்கினர்.
இதேவேளை, மலையக் கல்வி அபிவிருத்தி மன்றம் தன்னைப் பாராட்டி நிதி உதவி வழங்கியமைக்கு என்றென்றும் நன்றிகடன் பட்டுள்ளதாக அகல்யா தெரிவித்தார். (என். வீ. ஏ.)