குத்துச்சண்டை வீராங்கனைகளை கொடுமைப்படுத்தியதையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையும் ஒப்புக்கொண்ட அவுஸ்திரெலியாவின் தேசிய குத்துச்சண்டை பயிற்றுநர் ஜமி பிட்மன், பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் குத்துச்சண்டைப் போட்டிகளுக்கான வெளிநாட்டு விஜயங்களின்போது ஒழுக்காற்று விதிகளை ஜமி பிட்மன் 11 வெவ்வேறு தடவைகள் மீறியதாக முன்னணி குத்துச்சண்டை வீரர்களின் சார்பாக செயல்படும் அவுஸ்திரேலிய நடவடிக்கை மன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது.
விளையாட்டுத்துறையில் எதிர்கொள்ளப்படும் சர்ச்கைகளை தீர்த்துவைப்பதற்காக நியமிக்கட்ட சுயாதீன அரச அமைப்பான தேசிய விளையாட்டுத்துறை நியாயாதிக்க சபை கடந்த மாதம் அவருக்கு எதிரான மிக மோசமான சாட்சியங்களைப் பதிவுசெய்தது. அதன் விபரங்கள் புதன்கிழமை (17) பகிரங்கப்படுத்தப்பட்டது.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையின் போது, 42 வயதான பிட்மன், தனக்கு வெட்கமாகவும் சங்கடமாகவும் இருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் தன்னால் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் பொருத்தமற்றவை என்பதையும் பிட்மன் ஒப்புக்கொண்டார்.
எனவே, விசாரணை முடிவுகளை எதிர்த்து வாதிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சாட்சியங்களை கவனத்தில் கொண்ட அவர், ‘எதிர்வரும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தயாராகும் வீரர்களுக்கு மேலும் மன அழுத்தத்தைக் கொடுக்கவோ பதட்டத்தையோ ஏற்படுத்தவோ விரும்பவில்லை. அவ் விளையாட்டு விழாவுக்கான பயிற்றுநர் பதவியை தொடர்வதற்கான விருப்பத்தை வாபஸ் பெற்றார். அத்துடன் மீறல்களில் ஈடுபட்டத்தையும் ஒப்புக்கொண்டார்’ என விளையாட்டுத்துறை நியாயதிக்க சபை குறிப்பிட்டது.
விசாரணை முடிவில், 2023 நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகும் வகையில் ஆறு மாதங்களுக்கு அவருக்கு தடை விதிக்குமாறு பரிந்துரைத்த தேசிய விளையாட்டுத்துறை நியாயதிக்க சபை, பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் எழுத்துமூல மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உள ஆற்றுகைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அவுஸ்திரேலியா சார்பாக போட்டியிட்ட பிட்மன், நான்கு வருடங்களுக்கு பின்னர் உலக குத்துச்சண்டை சங்க மத்திய பாரப்பிரிவு சம்பியன் படத்திற்காக குத்துச் சண்டை கோதாவில் இறங்கினார்.
2021ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் அவுஸ்திரேலியாவின் தேசிய குத்துச்சண்ட பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.