ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் பிள்ளைகளை பிரசவித்துள்ள கம்பஹா வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா தம்பதியினருக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக்க சூழ் நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவிகள் தியாகி அறக்கொடை நிதியத்தினால் இன்று திங்கட்கிழமை (23) வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆறு குழந்தைகளை கடந்த வாரம் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் திருமதி மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா பெற்றெடுத்துள்ளார். துரதிஷ்டவசமாக ஒரு குழந்தை தனது நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இறந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளார்.
இக்குடும்பத்தின் நிலைமை குறித்து ஸ்ரீ லங்கா மீடியா பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு இணங்க முதல் கட்டமாக ஒர் இலட்சம் ரூபாய் நிதியுதவித்தொகை இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் அவர்கள் மூலம் குறித்த தம்பதியினரிடம் இன்றைய தினம் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் ஏ.தந்த நாராயன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதாந்த 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியினை தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலங்களுக்கு வழங்குவதற்கு நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அங்கு கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்
இன,மத வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையிலேயே பாதிக்கப்பட்ட தேவையுடைய மக்கள் தன்னிடம் கேட்காமலே அவர்களின் இல்லம் தேடிச் சென்று உதவும் தன்மையை கொண்ட ஒரு கொடை வள்ளல் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் என்றால் எவரிடமும் மாற்றுக் கருத்து கிடையாது.
இதேவேளை இவ் ஆறு பிள்ளைகளை பிரசவித்துள்ள குறித்த பெண்ணின் கணவர் கருத்து தெரிவிக்கும் போது ” இன,மத மொழி வேறுபாடுகளைக் கடந்து யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் எனது குழந்தைகளின் பராமரிப்புக்காக உதவ முன்வந்தமை எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நாட்டில் மனிதாபிமானமிக்க இலங்கையர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு முன்னுதாரணமாகும் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு உதவிய அந்த நல்லுள்ளதிற்கும் இவ் உதவியை எனது காலடிக்கு கொண்டு சேர்த்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
மேலும் இவ் வருடத்திற்குள் இவ்வாறான நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ள புத்தளத்தை சேர்ந்த முஸ்லிம் தாய்க்கும் மற்றும் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ள ஹட்டன்- மஸ்கெலியா புரன்வீன் ராணிதோட்டதை சேர்ந்த தமிழ் தாய்க்கும் , நான்கு குழந்தைகளை பிரவேசித்துள்ள குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த சிங்கள தாய்க்கும் இக் குழந்தை பராமரிப்பு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மனிதாபிமான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் தியாகி அறக்கொடை நிதியம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அதன் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.