ஒரே நாளில் நிகழவிருக்கும் மூன்று விண்வெளி அதிசயம்:
வரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 3 விண்வெளி நிகழ்வுகள் ஒருசேர நிகழவிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. மட்டுமின்றி அன்றைய தினம் பிப்ரவரி மாத முழு நிலவும் மற்றும் வால் நட்சத்திரம் ஒன்றும் வானில் தோன்றும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது வெள்ளி இரவு 10:30 மணியளவில் நிகழும் எனவும் இது 12:43 மணி அளவில் தெளிவாக தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வானது ஐரோப்பா, பெரும்பாலான ஆசிய நாடுகள், வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களால் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த நிகழ்வானது Snow moon எனப்படும் அதிக பனிப்பொழிவு நிறைந்த பிப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலா. குறித்த மாதத்தில் பனிப்பொழிவு காரணமாக பழங்குடியின மக்கள் உணவுக்கு அல்லல் படுவதால் இந்த மாதத்தில் தோன்றும் முழு நிலவை Hunger Moon எனவும் அழைக்கின்றனர்.
மட்டுமின்றி இந்த முழு நிலவானது அதிக நேரம் நீடிக்கும் என்பதும் இதன் சிறப்பாகும். மாலை 4.44 மணிக்கு தோன்றும் நிலவானது இரவு 7.30 மணியளவில் மறையும் என குறிப்பிடுகின்றனர்.
மூன்றாவது நிகழ்வாக வால் நட்சத்திரம் ஒன்று இதே நாளில் வானில் ஒளிர இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது சனிக்கிழமை மட்டுமே பொதுமக்களுக்கு வெறும் கண்களால் காண முடியும் எனவும் இது சீனர்களின் புத்தாண்டை ஒட்டி தோன்றுவதால் புத்தாண்டு வால் நட்சத்திரம் எனவும் கூறப்படுகிறது.
1948 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த வால் நட்சத்திரத்தினை ஆய்வாளர்கள் தங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர். இந்த வால் நடசத்திரமானது ஐந்தேகால் ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் எனவும் அந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை சீனர்கள் மிக சிறப்பாக கொண்ட்டாடுவர் எனவும் கூறப்படுகிறது.