கடந்த பத்து வருடங்களில் 9 லட்சம் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் 9 லட்சம் சிங்கள மற்றும் தமிழ் பெண்களுக்கு எல்.ஆர்.டி. சத்திரசிகிச்சை மூலம் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது.
75 வீதமான சிங்கள பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
ஒரு வீதமேனும் முஸ்லிம் பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளவில்லை.
இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களே கடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சையை மேற்கொள்கின்றன. இதற்கு அரசாங்கத்தின் சிலர் உதவுகின்றனர்.
இந்த நிறுவனங்கள் பெண்கள் மட்டுமன்றி ஆண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றன.
குடும்பக்கட்டுப்பாடு செய்வதன் மூலம் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் 900 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிக்கொண்டுள்ளன.
குடும்பக் கட்டுப்பாடு சத்திரசிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு 500 ரூபா பணம் வழங்கப்படுகின்றது.
எல்.ஆர்.டி. சத்திரகிசிச்சை மூலம் சிங்களத் தமிழ் பெண்கள் மலட்டுத்தன்மை அடைவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இனியேனும் இந்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் பௌத்த பிக்குகளான நாம் இந்த விடயத்தில் தலையீடு செய்ய நேரிடும்.
மேலும் நாட்டில் நாள் ஒன்றுக்கு 2000 சட்டவிரோத கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன, இவற்றில் அதிகமானவை சிங்களப் பெண்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றன என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.