நாடாளுமன்றத்துக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்காக, பிரிட்டன் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமாசெய்வதாக அறிவித்திருக்கிறார்.
பிரிட்டனில், தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அவரது அமைச்சரவையில், சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராக மைக்கேல் பேட்ஸ் பதவி வகித்துவருகிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் அவை உறுப்பினராக அவர் உள்ளார். பெண்களுக்கான சம உரிமை வழங்குவதுகுறித்த விவாதம், நேற்று (31.1.2018) அவையில் நடந்தது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினரான பாரோனெஸ் லிஸ்டர் என்பவரின் கேள்விக்குப் பதிலளிக்க, உரிய நேரத்தில் பேட்ஸ் வரவில்லை.
சுமார் ஒரு நிமிடம் தாமதமாக வந்த பேட்ஸ், ‘’அரசு சார்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு உரிய பதிலைக் கொடுக்கவேண்டியது என்னுடைய கடமை. உரிய நேரத்தில் பதிலளிக்க இயலாமல்போனதற்காக நான் வெட்கப்படுகிறேன். அதற்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்று கூறியபடி அவையை விட்டு உடனடியாக வெளியேறினார். இதைக் கண்டு, அந்தக் கேள்வியை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் பரோனெஸ் லிஸ்டர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்துப் பேசிய லிஸ்டர், ‘’தாமதமாக வந்ததற்காக அவர் மன்னிப்புக் கோரினால் போதுமானது. அவர் ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை’’என்றார். இந்த நிலையில், மைக்கேல் பேட்ஸின் ராஜினாமாவை பிரிட்டன் பிரதமர் தெரசா மே நிராகரித்தார்.