இலங்கையில் இதுவரை காலமாக கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் நட்டஈடுகளுக்காகவும் அரசாங்கம் இதுவரையில் 138 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு நாட்டை முடக்குவதால் 140 கோடி ரூபா தேசிய வருவாயில் நட்டம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையில் கொவிட் -19 வைரஸ் பரவல் மூன்று அலைகளாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், வங்கிக்கடன்களில் தளர்வுகளை ஏற்படுத்தவும், சலுகைகளை பெற்றுக்கொடுக்கவும், மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும், சுகாதார தரப்பினருக்கான விசேட தேவைகளை பெற்றுக்கொடுக்கவும், இராணுவம், வைத்தியர்கள், அரச ஊழியர்கள் என கொவிட் -19 தடுப்பு செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்யவும் என இதுவரையில் அரசாங்கம் 138 பில்லியன் ரூபா செலவு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாது மேலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் உள்ள காரணத்தினால் அதற்கும் மேலதிகமாக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதற்கு மாறாக நாட்டினை முடக்க வேண்டும் எனவும், மக்களை வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுத்தாது கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலர் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டினை ஒரு நாள் முடக்குவதாயின் 140 கோடி ரூபா தேசிய வருவாயில் நட்டம் ஏற்படுகின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையில் இவ்வாறான சிக்கல்கள் நெருக்கடிகள் ஏற்படும் என்றால் இதன் தாக்கல் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் வெளிப்படும்.
மக்களே இதற்கான சுமையையும் சுமக்க நேரிடும். எனவேதான் நாட்டினை முடக்குவதில் அரசாங்கம் தீர்மானம் எடுக்காது உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இன்றைக்கோ நாளைக்கோ கட்டுப்படுத்தப்படப்போகும் நோய் அல்ல, இந்த வைரஸ் பரவல் நீண்ட காலத்திற்கு தாக்கத்தை செலுத்தும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே நாம் இந்த நெருக்கடியையும் சமாளித்து பொருளாதார சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும். எனவே நாட்டினை முடக்கிவிட்டு மாதக்கணக்கில் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்காது போனால் இறுதியாக மக்கள் மீதி மிகப்பெரிய பொருளாதார சுமை விழும். அதனை தவிர்க்கவே அரசாங்கம் மாற்று நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றது என்றார்.