கால்பந்து உலகின் ஒரு சிறந்த ஜாம்பவான், தான் விளையாடுகின்ற இறுதிப்போட்டியில், தோல்வியோடு கண்ணீர் மல்க மைதானத்தில் ரசிகர்கள் முன் விடைபெறுகிறார். ஆம், இனிமேல் ககா, கால்பந்து விளையாடப் போவதில்லை.
பிரேசில் மட்டுமல்ல எந்தவொரு கால்பந்து ரசிகனுக்கும் ககாவைப் பிடிக்கும். காரணம், அவரது நேர்த்தியான ஆட்டம். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த மிட்ஃபீல்டர்கள் பட்டியலில் ககாவுக்கு எப்போதுமே இடமுண்டு. 2002 உலகக் கோப்பை மற்றும் 2005,2009 கன்ஃபெடரேசன் தொடர்களில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த ககா, எண்ணற்ற தனிநபர் விருதுகளை வென்றவர்.
பிரேசிலின் சாவ் பாலோ, இத்தாலியின் ஏசி மிலன், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் என உலகின் டாப் கிளப்புகளில் விளையாடியுள்ளார். 2003-2009 வரை ஆறு வருடங்களில் சீரி ஏ டைட்டில் மற்றும் சாம்பியன்ஸ்லீக் உட்பட ஐந்து சாம்பியன் பட்டங்களை மிலன் அணி வெல்ல காரணமாக இருந்தவர். மெஸ்சியும் ரொனால்டோவும் ஆதிக்கம் செலுத்தும் முன்னரே உலகின் தலைசிறந்த வீரருக்கான பாலன் டி ஓர் விருதை 2007 ம் ஆண்டு வென்றவர்.
ரிகார்டோ இசெக்சன் டாஸ் சாண்டோஸ் லெய்டே… சுருக்கமாக ககா. இளம் வயதில் ககாவின் தம்பி டியாகோ, ரிகார்டோ என்ற அவரது பெயரை உச்சரிக்கத்தெரியாமல், ககா என்று மழலை மொழியில் அழைக்க , அப்பெயர் ரிகார்டோ என்ற நிஜப்பெயரை ஓவர்டேக் செய்து நிரந்தரமானது. பிரேசிலின் மற்ற நட்சத்திரங்களைப் போல் அல்லாமல் வறுமையின் பிடியில் சிக்காத, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். எட்டு வயதில் ககாவின் திறமையைக் கண்டுவிட்ட பிரேசிலின் லோக்கல் கிளப் சாவ் பாலோ, அவரை யூத் அகாடமியில் சேர்த்துக்கொண்டது. 2001-ல் சாவ் பாலோ சீனியர் அணிக்கு ப்ரமோட் ஆன ககா, அந்த அணிக்காக மொத்தம் 58 போட்டிகளில் 23 கோல்களை அடிக்க, ஐரோப்பாவின் டாப் கிளப்புகளின் பார்வை இவர் மேல் விழுந்தது.
ககா ஒரு நாயகனாக உதயமான இடம் மிலனின் சான் சிர்ரோ மைதானம். களமிறங்கிய முதல் சீஸனிலேயே 10 லீக் கோல்களும் பல அசிஸ்ட்களும் பதிவு செய்ய, சீரி ஏ பட்டத்தை கைப்பற்றியது மிலன். ‘சீரி ஏ பிளேயர் ஆப் தி இயர்’ விருதுக்கும், பாலன் டி ஓர் விருதுக்கும் நாமினேட் ஆக, ககாவுக்கென்று தனி ரசிகர்படையே உருவானது. ககாவின் வேகம், கிரியேட்டிவ் பாஸிங், கோல் ஸ்கோரிங், டிரிபிளிங் அனைத்தும் ஒரே நேரத்தில் ஹிட் அடிக்க, ஒரே வருடத்தில் பாலன் டி ஓர், ஃபிஃபா வேர்ல்டு பிளேயர் ஆஃப் தி இயர், யூரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் (யுஏஃபா) கிளப் ஃபுட்பாலர் ஆஃப் தி இயர் மற்றும் ஐஎஃப் எஃப் எச் எஸ்ன்- வேர்ல்ட்ஸ் பெஸ்ட் பிளே மேக்கர் என நான்கு தனிநபர் விருதுகளைத் தனதாக்கினார் ககா. 2007 ககாவின் வருடம் என்றே கால்பந்து உலகில் இன்றும் அறியப்படுகிறது.
ஆறு வருடங்கள் மிலனில் வெற்றிக்கொடி நாட்டிய பிறகு, 2009 ல் ககா ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிக்கு 67 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானார். ஆனால், இத்தாலியைப் போல ஸ்பெயின் பயணம் சாதகமாக இல்லை.அங்கிருந்த நான்கு சீஸன்களிலுமே காயங்கள் ககாவின் வாழ்க்கையை புரட்டிப்போட, உடலளவிலும் மனதளவிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். அவர் தன் அசாத்திய வேகத்தையும் திறமையையும் இழந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், காயங்கள் ஒன்றும் அவருக்குப் புதிதல்லவே.
18 வயதில் நீச்சல் குளத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ககாவின் முதுகுத்தண்டில் கீறல் விழ, அவரது எதிர்காலமே கேள்விக்குறியானது. ஆனாலும், தன் விடாமுயற்சியால் மீண்டு வந்தார். அதேபோல, 2010 ல் தன் இடது முழங்காலில் நடந்த அறுவை சிகிச்சை எட்டு மாதங்கள் களத்துக்கே வர முடியாத அளவு அவரை உருக்குலைத்தது. அதிலிருந்தும் மீண்டார். அவர் மீண்டும் களத்துக்கு வரும் செய்தியை, ஒரு புதிய வீரரை ஒப்பந்தம் செய்த செய்தியைக் கூறுவதைப் போல மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்தார், அப்போதைய ரியல் மாட்ரிட் பயிற்சியாளரான ஜோசே மொரினியோ. அடுத்த வருடமும் முழங்கால் காயம் வலியேற்படுத்த, சில வாரங்கள் ஓய்விலிருந்தார். பிறகு மீண்டும் களம் கண்ட ககா, தன் பழைய ஃபார்மையும் மீட்டெடுத்தார்.
பிரேசில் தேசிய அணியிலும் ககாவின் பங்கு இன்றியமையாதது. உலகக் கோப்பையை வென்ற 2002 பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த ககா, 2006 மற்றும் 2010 உலகக் கோப்பைத் தொடர்களிலும் பிரேசிலுக்காக விளையாடினார். 2005 மற்றும் 2009 வருடங்களில் பிரேசில் அணி கான்ஃபெடரேசன் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். 2009 தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதைத் தட்டிச் சென்றார்.
ககா, ஒரு கூர்மையான அட்டாக்கிங் மிட்ஃபீல்டர். அவரது தலைமுறையின் சிறந்த மிட்ஃபீல்டர்களுள் தலையாயவர். பந்தை பெற்றதும் ஓட ஆரம்பிக்கும் இவரது கால்கள், திடீரென தீப்பிடிக்கும் வேகமும், அதே வேகத்தில் எதிரணி டிஃபெண்டர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் மடித்து, பந்துடன் எதிரணியின் கோல் பாக்சிற்குள் நுழையும் விவேகமும் ஒருங்கே அமையப்பெற்றவை. அதுதான், அவரின் அடையாளமும் கூட. நொடிப்பொழுதில் டிஃபெண்டர்களை கடப்பதும், அவர்களை ஏமாற்றி சக வீரர்களுக்கு பாஸ் போடுவதும்,பல நேரங்களில் கோல் பாக்சிற்கு வெளியே இருந்தே துல்லியமான ஸ்கிரீமர்களை தொடுப்பதும் ககாவின் டிரேட்மார்க் ஸ்கில்செட். சுயநலமில்லாத டீம் பிளேயர்.
அதிலும் எந்தவொரு கோல் கீப்பருக்கும் சிம்மசொப்பனமாக இருக்கக்கூடியது ககாவுடனான ‘ஒன் ஆன் ஒன்’ சிச்சுவேசன்கள்தான். பந்தை கர்ல் செய்து எந்தவொரு கோல் கீப்பரையும் ஏமாற்றி பந்தை வலைக்குள் திணிக்கும் ஒரு கிளினிக்கல் ஃபினிஷர். கோல் அடிக்கும் வாய்ப்புகளை சக வீரர்களுக்கு உருவாக்கும் கலையில் மிகவும் நேர்த்தியானவர். குறிப்பாக 2004-2005 சீஸனில் மிலன் அணிக்காக விளையாடிய ககா, சாம்பியன்ஸ் லீக் தொடரில் லிவர்பூல் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில், மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து எதிரணியின் கோல் பாக்சின் தொடக்கத்துக்கு, மூன்று டிபெண்டர்களைத் தாண்டி சக வீரருக்கு செய்த லோப் பாஸ் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த பாஸ் என்று இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
தன் 35 வது வயதில் ஓய்வை அறிவித்துவிட்டார் ககா. இனி அவரின் கால்கள் களத்தில் பம்பரமாக சுழலப்போவதில்லை. கர்வமில்லாத ஒருவன்தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும். ககா, கால்பந்து ரசிகர்களின் மனதில் என்றும் நிறைந்திருப்பார்!