ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் 490 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் நார்த்வெஸ்ட் யுனிவர்ஸிட்டி புக்கே அணியும் போட்ச் டார்ப் அணியும் மோதின. நார்த்வெஸ்ட் யுனிவர்சிட்டி புக்கே அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஷேன் டேட்ஸ்வெல் எதிரணி பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். சிக்சரும், பவுண்டரியும் பறந்தன. நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த டேட்ஸ்வெல் 151 பந்துகளில் 490 ரன்கள் குவித்தார். இதில் 27 பவுண்டரிகளும், 57 சிக்சர்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் ஒரு வீரர் இவ்வளவு ரன்கள் குவிப்பது ஒரு சாதனையாகும். அந்த அணியின் மற்றொரு வீரர் ருவான் ஹாஸ்புருக் 52 பந்துகளில் 6 பவுண்டரி, 12 சிக்சர்களுடன் 104 ரன்கள் குவித்தார். நார்த்வெஸ்ட் யுனிவர்சிட்டி புக்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் 3 விக்கெட் இழப்புக்கு 677 ரன் குவித்தது.
இதையடுத்து களம் கண்ட போட்ச் டார்ப் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் புக்கே அணி 387 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சரவெடி காட்டிய டேட்ஸ்வெல் 20 வயதான இளைஞர் ஆவார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.