கிறிஸ் வோக்ஸின் மிரட்டலான பந்து வீச்சுடன் இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் களத்தடுப்பை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா மாத்திரம் இங்கிலாந்தின் பந்து வீச்சுகளுக்கு தாக்குப் பிடித்தாட ஏனைய முன்னணி வீரர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
பத்தும் நிஷாங்க 5 ஓட்டத்துடனும், அசலங்க டக்கவுட்டுடனும், சானக்க ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
எனினும் 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் பெரேரா – வர்னிந்து ஹசரங்க ஜோடி, இங்கிலாந்தின் பந்து வீச்சுகளை சாமர்த்தியமாக எதிர்கொண்டு ஆடுகளத்தில் நிலைத்தாடியது.
இவர்கள் இருவரும் மொத்தமாக 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக அணிக்கு பெற்றுக் கொடுத்தனர்.
28.4 ஆவது ஓவரில் ஹசரங்க மொத்தமாக 65 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களுடன் கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய தனஞ்சய லக்ஷான், ரோமேஸ் மெண்டீஸ் ஆகியோரும் சொல்லும்படியான ஓட்டங்களை பெறாது ஆட்டமிழக்க, ஆரம்ப வீராக களமிறங்கிய குசல் பெரேராவும் மொத்தமாக 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணி 32.2 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது.
பின்னர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத இலங்கை 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் 10 ஓவர்களுக்கு பந்து பரிமாற்றம் மேற்கொண்டார். அதில் 5 ஓவர்களுக்கு எதுவித ஓட்டங்களையும் வழங்காது ஏனைய ஓவர்களில் 18 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, வில்லி 3 விக்கெட்டுகளையும், மொய்ன் அலி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
186 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜோனி பெயர்ஸ்டோ, லிவிங்ஸ்டனுடன் இணைந்து அதிரடி காட்டினார்.
இவர்கள் இருவரும் இணைந்து 29 பந்துகளில் 54 ஓட்டங்களை சேர்த்தனர். பெயர்ஸ்டோ 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை குவித்தார்.
மறுமுனையில் லிவிங்ஸ்டன் 12 பந்துகளில் ஒன்பது ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அணியின் முதல் விக்கெட் 54 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
பின்னர் ஜோனி பெயர்ஸ்டோ 43 ஓட்டத்துடனும், அடுத்தடுத்து களமிறங்கிய இயன் மோர்கன் 6 ஓட்டத்துடனும், சாம் பில்லிங் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இங்கிலாந்து 11.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 80 ஓட்டங்களை பெற்றிருந்தது.
5 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மொய்ன் அலி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட் காப்பாளர் குசல் பெரேராவிடம் பிடிகொடுத்தார். எனினும் அந்த பிடியெடுப்பை நழுவ விட்டார் குசல் பெரேரா.
அந்த துரதிர்ஷ்டமான சம்பவமே பின்னர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோ ரூட் – மொய்ன் அலி ஜோடி சேர்ந்தாட இங்கிலாந்து 30 ஓவர்களில் 162 ஓட்டங்களை குவித்தது.
வெற்றியின் இறுதித் தருவாயில் மொய்ன் அலி 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சாம் குர்ரன் களமிறங்கினார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றி வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் ஜோ ரூட் 79 ஓட்டங்களுடனும், சாம் குர்ரன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இலங்கை சார்பில் துஷ்மந்த சாமர 3 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது போட்டி ஜூலை 1 லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.