ஒப்புக்கொண்ட ஊதியத்தை தராவிட்டால், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வோம் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ’பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் தொழிலாளர்கள் செய்த பிரச்சினையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் கொண்டு படப்பிடிப்பு நடத்தலாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. மேலும், பெப்சி தொழிலாளர்களுக்கான சம்பளம் இவ்வளவுதான் எனவும் அறிவித்தது. இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:
தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. பொது விதிகள் குறித்து பெப்சியுடன் ஒப்பந்தம் போட வேண்டும். பெப்சியுடன் பணியாற்ற மாட்டோம் என்ற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப் பெற வேண்டும். மேலும் தற்போது 35 படங்களின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கெனவே ஒப்புக் கொண்ட சம்பளத்தை தயாரிப்பாளர் சங்கம் தர மறுப்பது நியாயமில்லை. ஒப்புக்கொண்ட ஊதியத்தை தராவிட்டால் ஆகஸ்ட் 1 முதல் வேலைநிறுத்தம் செய்வோம். 25,000 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாங்கள் உணர்வுப்பூர்வமான முடிவுகளை எடுக்கவில்லை. இன்றுவரை படப்பிடிப்பில் 100% பெப்சி தொழிலார்கள்தான் வேலை செய்து வருகிறார்கள். 24 ஆயிரம் பேரின் குடும்பத்தினர் தமிழ் திரைப்படத்துறையை நம்பி உள்ளனர்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.