ரஃபேல் போர் விமானங்கள் வாங்க செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்ஸ் அரசுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் அம்சங்களை, ஃபிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பல்வேறு அம்சங்களை மாற்றியமைத்து மோடி தலைமையிலான தற்போதைய பி.ஜே.பி. அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணி அரசு செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை விடவும் மிகவும் சிறப்பான அம்சங்களுடன் கூடிய ஒப்பந்தத்தை மத்திய அரசு தற்போது மேற்கொண்டிருப்பதாக பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த ஒப்பந்தத்தில் தவறு நடந்திருப்பதாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறைகூறினார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசிய நிலையில், அதுபற்றி கருத்துதெரிவித்த ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்துள்ள ஊழல் மற்றும் அதில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் வகையில் பிரதமரின் உரை உள்ளதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைமையிலான அரசு, 2012-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பின்னர் வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஃபிரான்ஸ் அரசுடன் செய்து கொண்டு ஒப்பந்தம், முறையானதல்ல என்று தெரிவித்தது. இதையடுத்து 2016-ம் ஆண்டு இப்போதைய அரசு 36 போர் விமானங்களை வாங்கியது. ஆனால், ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த 36 போர் விமானங்களுக்கு 526 கோடி ரூபாய்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், பி.ஜே.பி. அரசு ஆயிரத்து 570 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி அப்போதே குற்றம்சாட்டியிருந்தது. தற்போது, மத்திய அரசுக்கு எதிராக அதே குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கூறியுள்ளார்.
மேலும், பிரதமரின் உரையில் நாட்டின் முக்கியப் பிரச்னைகள் பற்றி குறிப்பிடவில்லை என்று ராகுல் குறைகூறினார். “வேலைவாய்ப்பு, விவசாயம், எல்லைப் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகள் உள்ளன. இந்த மூன்று பிரச்னைகளையும் தீர்க்க எந்த நடவடிக்கை குறித்தும் பிரதமர் அறிவிக்கவில்லை. நாடு முழுவதும் அன்றாடம் வேலைதேடும் 30 ஆயிரம் இளைஞர்களில் 450 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. விவசாயிகள் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல் மற்றும் இந்தியா – சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பிரச்னை போன்றவற்றால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆனால் முக்கியப் பிரச்னைகளை எல்லாம் விடுத்து, அவற்றிலிருந்து திசைதிருப்பும் வகையில் பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரை உள்ளது” என்றார் அவர்.