தயாரிப்பு : சினி கிராஃப்ட் புரொடக்ஷன்
நடிகர்கள் : கவுண்டமணி, யோகி பாபு, ரவி மரியா, ஓ ஏ கே சுந்தர், மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : சாய் ராஜகோபால்
மதிப்பீடு : 2 / 5
2016ஆம் ஆண்டில் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ ஆகிய படங்களில் நடித்த பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காத மூத்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. அரசியல் நையாண்டி பாணியிலான இந்த திரைப்படம் கவுண்டமணியின் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
பழுத்த அனுபவம் மிக்க அரசியல்வாதியான முத்தையா தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டினை பெற்று தோல்வி அடைகிறார். அதன் பிறகு அந்தக் கட்சியை விட்டு வெளியேறி, சுயேசையாகப் போட்டியிடுகிறார். இதில் அவர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பது ஒரு புறமும் மறுபுறத்தில் அவருடைய திருமணமாகாத மூன்று தங்கைகளுக்கும் மாமியார் தொல்லைகள் இல்லாத வகையில் ஒரே குடும்பத்தில் சகோதரராக இருக்கும் மூவரை திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார். ஆனால் அவருடைய தங்கைகள் மூவரும் தங்களின் மனதை கவர்ந்த வெவ்வேறு ஆண்களை காதலிக்கிறார்கள். இவர்களின் திருமணம் அண்ணனின் விருப்பப்படி நடைபெற்றதா? அல்லது தங்கைகளின் விருப்பப்படி நடைபெற்றதா? என்பதும் இணைத்து சொல்லப்படுவது தான் இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’ படத்தின் கதை.
கவுண்டமணியின் முகத்தில் முதுமை தெரிந்தாலும் அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை என்றாலும் அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. அதிலும் அரசியல் வசனங்களை நையாண்டித்தனத்துடன் பேசி ரசிகர்களை வசப்படுத்துகிறார். படம் முழுவதிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கவுண்டமணி பாணியிலான நகைச்சுவைகள் கொட்டி கிடக்கிறது. இருந்தாலும் உருவ கேலி தொடர்பான நகைச்சுவை மிகையாக இடம் பிடித்திருக்கிறது. இதை தவிர்த்து இருக்கலாம்.
படத்தின் கதையை மட்டுமல்ல படத்தையும் கவுண்டமணி தான் தாங்கி பிடித்திருக்கிறார். அவர் மட்டுமே நட்சத்திர முகமாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளில் ரசிகர்களுக்கு சில தருணங்களில் சோர்வு ஏற்படுகிறது. பொதுவாக இது போன்ற கொமடி திரைப்படங்களில் ‘நோ லாஜிக் ஒன்லி மேஜிக் ‘ என்ற மந்திரம் தான் மையச் சரடு. அதனை இயக்குநர் சரிவர செய்திருக்கிறார். ஆனால் இந்த காலத்து இளைய தலைமுறையினருக்கு இது மட்டும் போதாது. அதனால் ரசிகர்களை படமாளிகையில் இந்தப் படம் அவர்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கு போதுமானதாக இல்லை.
கவுண்டமணியை தவிர்த்து வேறு அனைத்து நடிகர்களும் இயக்குநர் சொன்னதை மட்டும் தான் செய்திருக்கிறார்கள்.
பாடல்கள்,பின்னணி இசை,ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ,கலை இயக்கம் , என அனைத்து விடயங்களும் குறைந்தபட்சத்தரத்திலேயே இருக்கின்றது.
ஒத்த ஓட்டு முத்தையா – நோட்டா
