வரும் 11வது ஐ.பி.எல்., சீசன் போட்டிகள் துவங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இனி மாலை 3:00 மற்றும் இரவு 7:00 மணிக்கும் போட்டி துவங்கும்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் துவங்கப்பட்டது. இதன் 11வது சீசன், அடுத்த ஆண்டு ஏப்.4– மே 31 வரை நடக்கவுள்ளது. இத்தொடரில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன் படி, மாலை 4:00 மற்றும் இரவு 8:00 மணிக்கு போட்டிகள் துவங்கின. இந்த ஆண்டு முதல் மாலை 3:00 மற்றும் இரவு 7:00 மணிக்கும் போட்டிகள் துவங்கும்.
என்ன காரணம்: கடந்த முறை, ‘எலிமினேட்டர்’ சுற்றில் (மே 17) கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டதால் 6 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு 8:00 மணிக்குப்பதில் இரவு 12:35 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 1:30 மணிக்குத் தான் முடிந்தது. இது, மைதானத்திலிருந்த ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. வீரர்களும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், போட்டி நேரம் மாற்றப்பட்டது.
வீரர்கள் மாறலாம்: சில நேரங்களில், நட்சத்திர வீரர்களுக்கு கூட ‘லெவன்’ அணியில் இடம் கிடைப்பது கிடையாது. இதற்கும் மாற்று வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி, தொடரின் முதல் 7 போட்டிகளில் குறைந்தது 2 போட்டியில் பங்கேற்காத வீரர்கள் கணக்கில் எடுக்கப்படும். இவர்கள் விருப்பப்பட்டால், தங்கள் அணியின் ஒப்புதலுடன் மற்ற அணியுடன் இணைந்துக் கொள்ளலாம். இதன் மூலம், மீதமுள்ள போட்டிகளில் வேறொரு ‘லெவன்’ அணி சார்பில் விளையாட முடியும்.
எப்போது ஒப்புதல்: இது குறித்து ஐ.பி.எல்., சேர்மன் ராஜிவ் சுக்லா கூறுகையில்,‘‘ போட்டிக்கான நேரத்தை மாற்றுவது குறித்து விவாதத்திற்கு, அணி உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதை ஔிபரப்பும் நிறுவனமும் ஏற்றுக்கொண்டது. தொடரின் பாதியில், போதிய வாய்ப்பு கிடைக்காத வீரர்களை வேறு அணியில் விளையாடும் திட்டத்தை கொண்டு வர உள்ளோம். இவை அனைத்துத்திற்கும், வரும் 5ம் தேதி நடக்கவுள்ள ஆட்சிமன்ற கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும்,’’ என்றார்.