இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர் யுஸ்வேந்த்ர சஹால் படைத்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 187ஆக உயர்த்தி ஐபிஎல் பந்துவீச்சில் புதிய சரித்திர நாயகனாக தன்னை பதித்துக்கொண்டார்.
2013இல் மும்பை இண்டியன்ஸ் அணியில் அறிமுகமாகி பின்னர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்த்ர சஹால் தற்போது ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இடம்பெறுகிறார்.
இதுவரை 143 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சஹால், மொத்தமாக 187 விக்கெட்களைக் கைப்பற்றி ட்வேன் ப்ராவோவின் 184 விக்கெட்கள் என்ற சாதனையை முறியடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 183 விக்கெட்களுடன் எதிர்கொண்ட யுஸ்வேந்த்ர சஹால், நிட்டிஷ் ராணா விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ப்ராவோவின் சாதனையை சமப்படுத்தினார். அதன் பின்னர் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை கைப்பற்றி ட்வென் ப்ராவோவின் 184 விக்கெட்கள் என்ற சாதனையை முறியடித்தார்.
21.27 என்ற பந்துவீச்சு சராசரியைக் கொண்டுள்ள சஹாலின் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களாகும். அவரது எக்கொனொமி ரேட் 7.63 ஆகும்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலில் 100 விக்கெட்களை வீழ்ந்தியவர் இலங்கையின் யோக்கர் மன்னன் லசித் மாலிங்க ஆவார். அத்துடன் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (70) இந்த மைல்கல்லை எட்டியவர் என்ற சாதனையை இன்னமும் மாலிங்க கொண்டுள்ளார். மொத்தமாக 170 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள மாலிங்க 2019இல் ஐபிஎல் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.
மும்பை இண்டியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக இருந்த மாலிங்க, இந்த வருடம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்றுநர் குழாத்தில் இடம்பெறுகிறார்.
அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் சஹாலைத் தொடர்ந்து ட்வேன் ப்ராவோ (183), பியூஸ் சௌலா (174), அமித் மிஷ்ரா (172), ரவிச்சந்திரன் அஷ்வின் (171), லசித் மாலிங்க (170) ஆகியோர் இடம்பெறுகின்றனர்.