ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், ‘இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமைகள்’ பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கை வெளியாகியுள்ளது.
விடைபெற்றுச் சென்றுள்ள உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை செப்பனிடப்படாத முற்கூட்டிய அறிக்கையாகும்.
இருப்பினும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கைக்கும், வெளியாகியுள்ள முற்கூட்டிய அறிக்கைக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் ஏதும் ஏற்பட்டு விடப்போவதில்லை.
அந்தவகையில் வெளியாகியுள்ள அறிக்கையானது, அறிமுகம், பின்னணி, பொருளாதார நெருக்கடியில் மனித உரிமைகளின் தாக்கம், மனித உரிமைகள் போக்குகள் மற்றும் வளர்ச்சிகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல், முடிவுரை மற்றும் பரிந்துரைகள் ஆகிய ஏழு பிரதான தலைப்புக்களை உள்ளடக்கியதாக உள்ளது.
குறிப்பாக, மனித உரிமைகள் போக்குகள் மற்றும் வளர்ச்சிகள் என்ற தலைப்பின் கீழ், சட்ட மற்றும் நிறுவன மாற்றங்கள், (இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்), இராணுவமயமாக்கல், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், முன்னாள் போராளிகள், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான அச்சுறுத்தல்கள்? கருத்து சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் சட்ட அமுலாக்கம் ஆகிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற தலைப்பின் கீழ், நிலைமாறுகால நீதி வழிமுறைகள் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் (நிலங்களை மீள கையளித்தல்), ஆதாரமான வழக்குகள், தீர்மானம் 46/1, பத்தி 6 இன்படி உயர்ஸ்தானிகரகத்தின் நடவடிக்கைகளான தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான மேலதிகமான தெரிவுகள் ஆகிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த அறிக்கையில் கடந்த 13ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வந்திருந்த பொறுப்புக்கூறல், நீதிவிசாரணையை மையப்படுத்திய அறிக்கைக்கு சற்று மாறான வகையில், சில விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் ‘அரகலய’ போன்ற அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்கப்பட வேண்டியமை, பொருளாதார குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை, அதற்காக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள், தென்னிலங்கையை நோக்கிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிற்போக்குத்தனமான மீள்பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் அவையாகும்.
இந்நிலையில், அறிக்கை வெளிவந்தவுடனேயே தென்னிலங்கையில் அறிக்கைக்கு எதிரான போர்க்கொடி சிங்கள தேசிய, பௌத்த அடிப்படை மையவாத சக்திகளால் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டு நீதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தரப்பில் இருந்து இரண்டுவிதமான பிரதிபலிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த தரப்பில் அதிகளவானவர்கள் அறிக்கையை முழுமையாக வரவேற்றுள்ளதோடு, குறித்த வடிவத்தை செம்மைப்படுத்தாது சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், பிறிதொரு அரசியல் சிவில் தரப்பினர் உறவுகளுக்காக போராடிக்கொண்டிருப்பவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் அறிக்கையில் உள்ளீர்க்கப்பட்ட விடயங்கள் ‘போதாமை’ காணப்படுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, அறிக்கையில், தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயங்களுக்கான முதன்மைத்தானம் கீழிறக்கப்பட்டு, தென்னிலங்கை விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைப்போன்று உணர்வதாகவும் அந்தத்தரப்புக்கள் விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளன.
இத்தகைய வெளிப்பாடுகளில் யதார்த்தங்கள் இருந்தாலும் ‘தன்னல’ அரசியலும், நிகழ்ச்சி நிரல்களும் ஒழிந்து கொண்டுள்ளன. இவ்வாறான நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் விவகாரங்களுடன் கூடுதலான நெருக்கங்களைக் கொண்ட இருபிரதிநிதிகள் மேற்படி அறிக்கை சம்பந்தமாக ஆழமான சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வெளிப்பாடுகள் அறிக்கை மீதான கண்மூடித்தனமான அதிருப்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் விடையளிப்பதாக உள்ளது.
அதில் முதலாமானவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன். அவர், “ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான விடயங்களை கொண்டிருப்பதோடு உயர்ஸ்தானிகர் தனது அதிகாரவரயறைக்குட்பட்டதாக அறிக்கையினைச் சமர்ப்பத்திருக்கின்றார்” எனக்குறிப்பிடுகின்றார்.
“ஐ.நா.உயர்ஸ்தானிகருடைய அறிக்கையின் உள்ளடக்கத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான பரிந்துரை தவிர்ந்த சாத்தியமான பல விடயங்களும் கூறப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிகாட்டுகின்றார்.
விசேடமாக, “கடந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமைகள் குறிப்பிடப்பட்டு அவை குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதோடு பொறுப்புக்கூறல் செய்யப்படவில்லை என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை முக்கியமானது” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், “காணிகள் மீளக்கையளிக்கப்படாமை, இராணுவப்பிரசன்னம், நிலைமாறுகால நீதிப்பொறிமுறை செயற்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறுகின்றார்.
இதனைவிடவும், “இலங்கையின் ஆட்சியாளர்கள் மீறல்களைச் செய்வதற்கும், பொறுப்புக்கூறாதிருப்பதற்கும் பௌத்த, சிங்கள பேரினவாத அடிப்படையில் அரசாங்கம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, அடிப்படை உரிமையான கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் பறிக்கப்படுவதும் கூறப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
மேலும், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் பற்றிய விசாரணைக்கான வலியுறுத்தல், தென்னிலங்கை போராட்டங்களில் அடக்குமுறை பிரயோகங்கள்;, பயங்கரவாத தடைச்சட்டத்தின் தொடர்பயன்பாடு, பொருளாதார குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுதல் உள்ளிட்ட விடயங்களும் உயர்ஸ்தானிகர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது, நீதி, பொறுப்புக்கூறலுக்காக காத்திருக்கும் தமிழர்களின் விடயங்களை பின்நகர்த்துவதாக அமையப்போவதில்லை. மாறாக வலுச்சேர்ப்பதாகவே அமையும். அதாவது, தென்னிலங்கையில், படைகளின் அராஜகம், செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு, வன்முறைகள் போன்றவை வடக்கு,கிழக்கில் தமிழர்கள் தசாப்தகாலமாக அனுபவிக்கும் மோசமான அடக்குமுறைகளை மேலும் அம்பலப்படுத்துவதாக உள்ளது”என்று அம்பிகா சற்குணநாதன் குறித்துரைக்கின்றார்.
மேலும், “பொறுப்புக்கூறல் விடயத்தில், ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படக்கூடிய சாட்சியங்களை திரட்டுவதற்கான பொறிமுறை நீடிக்கப்படவேண்டும், உயர்ஸ்தானிகரின் இலங்கைக்கான பிரசன்னங்கள் வலியுறுத்தப்பட வேண்டும், பேரவையின் காண்காணிப்பு தொடரப்பட வேண்டும் ஆகிய பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன.
எனினும், பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுப்பு நாடுகளின் செயற்பாடுகளுக்கு அப்பால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படக் கூடிய விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமித்தல், மியன்மார்,சிரியா போன்ற நாடுகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட விசேட விசாரணை பொறிமுறைகளை முன்மொழிதல் ஆகிய விடயங்களை உள்ளீர்க்கப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, அவர் “இலங்கையில் உள்ள அரசாங்கம் மனித உரிமை மீறல்கள், பொறுப்புக்கூறல், நீதிவிசாரணை உள்ளிட்ட விடயங்களை தொடர்ச்சியாக மறுதலிக்கலாம். ஆனால் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மூலமாக அந்த விடயங்கள் அனைத்தும் சர்வதேசத்தில் மறைக்கப்படாது சமர்ப்பிக்கின்றன. ஆகவே, குறித்த அறிக்கை மிகவும் முக்கியமானது” என்றும் கூறினார்.
இதேநேரம், இரண்டாமவர், ஜெனிவாவில் 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் கொண்டுவரப்பட்ட காட்டமான பிரேரரணையை தோற்கடிப்பதற்கு பிரதான காரணகர்த்தாவாக இருந்தவர் அப்போதைய வதிவிடப்பிரதிநிதி கலாநிதி.தயான் ஜெயதிலக்க. அதன்பின்னர், 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஜெனிவாவின் 30/1தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியபோதும் ‘இறைமைக்கு ஆபத்து’ என்பதை மையப்படுத்தி கடுமையாக எதிர்த்தவராகவும் உள்ளார்.
அவர், “தற்போது வெளியாகியுள்ள உயர்ஸ்தானிகர் அறிக்கையை மிகமிக கவனமாக கையாள வேண்டும்” என்று எச்சரிக்கை மணியை அடித்திருக்கின்றார். தனது எச்சரிக்கைக்கு அவர் இரு காரணங்களை மையப்படுத்துகின்றார்.
அதில் முதலாவது, “தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும், ஆட்சியிலிருப்பது ராஜபக்ஷ அரசாங்கம் தான். அத்துடன் ராஜக்ஷக்களை விடவும் ரணிலே படைகளின் நம்பிக்கைக்குரியவராக உள்ளார். ஆகவே, ஏற்கனவே ஐ.நாவில் இணைஅனுசரணை வழங்குவதற்கு காரணமாக இருந்த அவரால் ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள எந்தவொரு முன்மொழிவையும் ஏற்றுக்கொள்ள முடியாது மாறாக நிராகரிக்கத்தான் முடியும்” என்று குறிப்பிடுகின்றார்.
இரண்டாவது, “உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் பின்னணி ஆகும். இதுகால வரையில் இருந்த உயர்ஸ்தானிகர்களை விடவும் மிச்செல் பச்லெட் வித்தியாசமானர். அவருடைய தந்தையார் இராணுவ அதிகாரியாக இருந்து பின்னர் சிலி ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர். அந்தத் துயரச் சம்பவத்துடன் நாட்டை விட்டுவெளியேறி பின்னர் மீண்டும் நாடு திரும்பி, பாதுகாப்பு அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். ஆகவே ஆழமாக அரசியல் பின்னணி இருப்பதால் இலங்கையின் அரசியலையும், அவர் துல்லியமாக உணர்ந்திருப்பார். அவ்விதமானவரின் அறிக்கையை சர்வதேசம் புறக்கணித்துவிடாது” என்கிறார் தயான்.
அடுத்து, “இம்முறை அறிக்கையில் மிக முக்கியமாக பொருளாதார குற்றங்களை இழைத்தவர்கள் தண்டனைக்குட்படுத்த வேண்டிய விடயம் கூறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் பேச்சுக்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், போராட்டங்கள் அடக்குமுறைக்குள்ளாக்குவது பற்றியும் கூறப்பட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. நிலைமாறுகாலநீதிப்பொறிமுறை பற்றி கூறப்பட்டுள்ளது அந்த வகையில் இவ்வறிக்கையானது ஒட்டுமொத்த இலங்கைக்குமானதாக உள்ளது” என்று குறிப்பிடுகின்றார்.
விசேடமாக, “இதுகால வரையும் காணப்பட்ட ஊழல்,மோசடிகள் என்பவற்றுக்கு அப்பால் பொருளாதார குற்றங்கள் இழைத்தவர்கள் மீதான விசாரணைகள், தண்டனைகளை அளித்தல், இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளமையானது ஒட்டுமொத்த சர்வதேசத்திற்கும் முன்னுதாரணமான விடயம்” என்றும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், “இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற நிலையில் சர்வதேச நாணயநிதியம்,மற்றும் இதர நாடுகளிடத்திலிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளது. குறித்த தரப்புக்கள் இலங்கையின் நெருக்கடிகளுக்கு அடிப்படையான காரணத்தினை உணர்வதற்கும் அவர்கள் வழங்கப்போகும் நிதி தவறான வழிகளுக்கு செல்லாதிருப்பதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மூலகாரணமாகப்போகின்றது” என்றும் தெரிவித்தார்.
எனினும் “நிலைமாறுகால நீதிப்பொறிமுறை இம்முறையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், வெளிநாட்டு விசாரணையாளர்களின் பிரசன்னம், நீதிவிசாரணையில் பங்கேற்பு என்பன நாட்டின் ‘இறைமை’ கேள்விக்குள்ளாக்கும் என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை”என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை முறையாக அணுகாமையினாலேயே காட்டமான விடயங்கள் உள்ளடக்கிய உயர்ஸ்தானிகர் அறிக்கை வெளியாகி நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டுவதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக, ‘போதாமை’ என்கின்ற பாதிக்கப்பட்ட தரப்புக்களும், ‘ஆபத்து’ என்கின்ற பெரும்பான்மை தரப்புக்களும் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையினுடைய நடைமுறைச்சாத்தியங்கள் பற்றிய புரிதலைக் கொண்டால் தேவலை.
ஆர்.ராம்
நன்றி – வீரகேசரி