ஐ.நா. அமைதிப் படையில் கனடா
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிகாப்பு நடவடிக்கைகளில் கனடிய இராணுவத்தினை ஈடுபடுத்துவது குறித்த அறிவிப்பினை கனடா விரைவில் வெளியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமைதிகாப்பு நடவடிக்கைகளில் கனடிய இராணுவத்தினை இணைத்துக் கொள்வதற்கான தயார்படுத்தல்களில் கனடிய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் டியோனின் பேச்சாளர், பல்வேறு முனைப்புக்களில் கனடாவின் தலைமைத்துவத்தினை நிலைநாட்டுவதை மீள ஒழுங்குபடுத்தும் முனைப்புக்களில் தற்போதய லிபரல் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காப்பு நடவடிக்கைகளில் கனடாவின் பங்களிப்பினை நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடும் என குறிப்பிட்டுள்ளார்.
அமைதிகாப்பு படை நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாதிப்புக்குள்ளான நாடுகளில் மோதல் தவிர்ப்பு, நடுநிலைமை வகித்தல், சமாதான ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கனடா ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.