முக்கிய பதவி மாற்றங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது.
அதன்படி இன்றைய தினம் கட்சி தலைமைப் பொறுப்பு குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கட்சியின் ஏனைய பதவிகள் தொடர்பாகவும் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினத்திற்குள் கட்சி தலைமை குறித்து சரியான தீர்மானமொன்று எட்டப்படாத நிலையில், அரசியல் ரீதியான சில முடிவுகளை எட்ட நேரிடும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நேற்றைய அரசியற்குழுக் கூட்டத்தின் போது கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.
அதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், ரவி கருணாநாயக்க உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கட்சியின் பொருளாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.