ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டிணைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
பிரதமர் நாட்டில் இல்லாத போது அமைச்சரவை நேற்று ஜனாதிபதியினால் அவசரமாக கூட்டப்பட்டதும் அதிருப்தியின் ஒரு வெளிப்பாடே ஆகும்.
இந்த அரசாங்கம் ஜனாதிபதிக்கு எதிராக, ஜனாதிபதியை மீறி செயற்பட்டுக் கொண்டு செல்கின்றது. முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு பல விடயங்கள் அறிவிக்கப்படுவதில்லை. அத்துடன், முக்கியமான முடிவுகள் பற்றி எவரும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதில்லையென்ற குறையும் ஜனாதிபதிக்குள் இருக்கின்றது.
அண்மையில் அடுத்த பிரதமர் யாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கூட்டமொன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவ்வாறு பிரதமராக வருபவர் ஊழல் மோசடிகள் அற்ற, தேசிய உணர்வுகளை மதிக்கும் ஒருவராக இருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் யாரைப் பற்றியதாக இருக்கின்றது என்பதை யாரும் விளங்கிக் கொள்ள முடியும். மத்திய வங்கி ஊழல் மோசடியைத் தான் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியிருந்தார் எனவும் சுசில் பிரேம்ஜயந்த எம்.பி. மேலும் கூறினார்.