பவுலிங் பிரச்னையில் ஐ.சி.சி., தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொண்டது,’’ என, ஓய்வு பெற்ற சயீத் அஜ்மல் புகார் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ‘சுழல்’ வீரர் சயீத் அஜ்மல், 40. மொத்தம், 35 டெஸ்ட் (178 விக்.,), 113 ஒரு நாள் (184), 64 ‘டுவென்டி–20’ (85) போட்டிகளில் விளையாடி உள்ளார். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக முழங்கையை வளைத்து பந்துவீசியதாக, கடந்த 2009ல் முதன் முதலில் சர்ச்சை ஏற்பட்டது.
கடந்த 2014ல் மீண்டும் இதே புகாரில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தடை விதித்தது. இதிலிருந்து மீண்டு வந்தபோதும், முன்பு போல ஜொலிக்க முடியவில்லை. நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அப்போது அவர் கூறியது:
எனக்கு 40 வயதாகிவிட்டது. உள்ளூர் போட்டியில் விளையாடி மதிப்பை குறைந்துக்கொள்ள விரும்பவில்லை. இளம் வீரர்களுக்கு வழிவிட இதுதான் சரியான தருணம். இதனால், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் சிக்கினேன். முழங்கையில் பாதிப்பு ஏற்பட்டதால், ஐ.சி.சி., நிர்ணயித்த அளவில் பந்துவீச முடியவில்லை. இவ்விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) எனக்கு ஆதரவு தந்தது. ஆனால், ஐ.சி.சி., முழங்கையில் பாதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பாரபட்சமாக நடந்து கொண்டது.
வருத்தமாக உள்ளது: இந்த வருத்தத்துடன் ஓய்வு பெறுகிறேன். எதிர்காலத்தில், இப்படி ‘சுழல்’ வீரர்கள் பாதிக்கப்படலாம். இதை தவிர்க்க பாகிஸ்தான் அணி உதவி செய்ய வேண்டும். தற்போதுள்ள பவுலர்களில் 90 சதவீதம் பேர், முறையாக பவுலிங் செய்கிறார்களா என பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், இவர்கள் நிச்சயமாக ஐ.சி.சி., விதிகளை மீறித்தான் பந்துவீசுவர்.
இவ்வாறு அஜ்மல் கூறினார்.