ஐசிசி மார்ச் மாதத்துக்கான அதிசிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் இலங்கையின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் இடம்பெறுகிறார்.
அயர்லாந்து வேகப்பந்துவீச்சாளர் மாக் அடயா, நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மெட் ஹென்றி ஆகியோரும் இவ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை டெஸ்ட் அணியில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இடம்பிடித்த கமிந்து மெண்டிஸ் தனது வாழ்நாளில் மறக்க முடியாத அரிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.
பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் விளையாட்டரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இலங்கை அணி தத்தளித்துக் கொண்டிருந்த போது அதனை எதிர்நீச்சல் போட வைத்தவர் கமிந்து மெண்டிஸ் ஆவார்.
முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று இலங்கை தடுமாறிக்கொண்டிருந்தபோது 7ஆம் இலக்க வீரராக களம் புகுந்த கமிந்து மெண்டிஸ், தனது அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
இதனிடையே கமிந்து மெண்டிஸ் தனது முதலாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். கமிந்து மெண்டிஸும் தனஞ்சய டி சில்வாவும் தலா 102 ஓட்டங்களைப் பெற்றனர்.
இதன் பலனாக முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை, எதிரணியை 188 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் அதனை விட திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் சதம் குவித்து வரலாறு படைத்தார்.
இலங்கை அணி 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று மீண்டும் தடுமாறிக்கொண்டிருந்தபோது 8ஆம் இலக்க வீரராக களம் புகுந்த கமிந்து மெண்டிஸ் மீண்டும் தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்து 7ஆவது விக்கெட்டில் 173 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7ஆம் இலக்கத்தில் அல்லது அதனைவிட கீழ்வரிசை இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் தனஞ்சய டி சில்வாவும் சதம் (108) குவித்திருந்தார்.
இதன் மூலம் ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது இலங்கை ஜோடி என்ற பெருமையையும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் மூன்றாவது ஜோடி என்ற பெருமையையும் அவர்கள் இருவரும் பெற்றுக்கொண்டனர்.
இது இவ்வாறிருக்க, பங்களாதேஷுடனான சர்வதேச ரி20 தொடரில் 3 போட்டிகளில் கமிந்து மெண்டிஸ் 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
மாக் அடயா, மெட் ஹென்றி ஆகியோரும் ஐசிசி மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களைக் கைப்பற்றிய அயர்லாந்து வீரர் மாக் அடயா, தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3 விக்கெட்களையும் சர்வதேச ரி20 தொடரில் 5 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து வீரர் மெட் ஹென்றி 17 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் 102 ஓட்டங்களையும் பெற்றார்.