பாகிஸ்தானுக்கு எதிராக அன்டிகுவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 238 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டி முடிவுக்கு அமைய 2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகள் நிரல்படுத்தலில் பாகிஸ்தான் 5ஆம் இடத்தையும் இலங்கை 6 ஆம் இடத்தையும் பெற்றன.
பாகிஸ்தான் அணித் தலைவர் கசிம் அக்ரம் குவித்த ஆட்டம் இழக்காத சதம், பந்துவீச்சில் அவர் பதிவு செய்த 5 விக்கெட் குவியல், ஹசீபுல்லா கான் குவித்த சதம், முஹம்மத் ஷேஸாத்தின் அரைச் சதம் என்பன பாகிஸ்தானின் வெற்றியை சுலபமாக்கின.
அப் போட்டிக்கான நாணய சுழற்சியில் துனித் வெல்லாலகே வெற்றிபெற்றபோதிலும் களத்தடுப்பை தெரிவு செய்தமை அவரால் இழைக்கப்பட்ட பெருந் தவறு என்பதை பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டங்கள் வெளிப்படுத்தின.
துடுப்பாட்டத்துக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 365 ஓட்டங்களைக் குவித்தது.
முஹம்மத் ஷேஸாத், ஹசீபுல்லா கான் ஆகிய இருவரும் 24.1 ஓவர்களில் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஷேஸாத் 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் ஹசீபுல்லாவும் கசிம் அக்ரமும் 2ஆவது விக்கெட்டில் 229 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்த வருட உலகக் கிண்ணப் போட்டிக்கான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை ஏற்படுத்தினர். அத்துடன் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் 6ஆவது சிறந்த இணைப்பாட்டமாகவும் அது பதிவானது.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய கசிம் அக்ரம் 80 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 13 பவுண்ட்றிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 135 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
ஹசீபுல்லா கான் 9 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 136 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கையினால் பயன்படுத்தப்பட்ட 8 பந்துவீச்சாளர்களும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களால் நையப் புடைக்கப்பட்டனர். மதீஷ பத்திரண 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 366 ஓட்டங்கள் என்ற மிகவம் கடினமான வெற்றி இலக்கை நோக்கி அழுத்தத்துக்கு மத்தியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 34.2 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு சுருண்டது.
முதலாவது பந்திலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்த இலங்கை 17ஆவது ஓவரில் 7ஆவது விக்கெட்டை இழந்தபோது வெறும் 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அணித் தலைவர் துனித் வெல்லாலகே, பின்வரிசை வீரர் வினுஜ ரன்புல் ஆகிய இருவரு;ம் 8ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இலங்கையின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடந்தது.
வெல்லாலகே 40 ஓட்டங்களையும் ரன்புல் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் கசிம் அக்ரம் 37 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
தென் ஆபிரிக்கா 3 ஆம் இடம்
அன்டிகுவா, கூலிஜ் மைதானத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷை 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா 3ஆம் இடத்தைப் பெற்றது. நடப்பு சம்பியனாக பங்குபற்றிய பங்களாதேஷ் 4ஆம் இடத்தைப் பெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் அரபுல் இஸ்லாம் 102 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 48.5 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.
டிவால்ட் ப்ரெவிஸ் 11 பவுண்டறிகள், 7 சிக்ஸ்ள் அடங்கலாக 138 ஓட்டங்களையும் பின்வரிசையில் மெத்யூஸ் போஸ்ட் 22 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் 41 ஓட்டங்களையும் குவித்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]