ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கனேடியரின் உடல் சிரியாவிலிருந்து கனடாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நஸாரினோ டஸ்ஸோன் எனப்படும் குறித்த நபர் கொல்லப்பட்டு பல மாதங்களான நிலையில் நீண்ட போராட்டத்தின் பின்னர் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை சவப்பெட்டி முத்திரையிடப்பட்ட நிலையில் காணப்படுவதனால், தனது மகனது உடலை பார்க்க முடியவில்லை என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த சில விடயங்கள், தனது மகனது அடையாளத்துடன் ஒத்துப் போயிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள தாயார், அந்த உடல் தனது மகனுடையது தானா என்பதில் தனக்கு இன்னமும் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தெளிவான தரவுப் பதிவுகளின் அடிப்படையில், அது நஸாரினோ டஸ்ஸோனுடைய உடல்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சடலத்தின் மீது கனடாவிலும் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவரது மரணத்துக்கான காரணம் ஆராயப்படும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், நஸாரினோ டஸ்ஸோனுக்கான இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் புதைக்கப்படுவது சாத்தியமாகாது என்றும் கூறப்படுகிறது.
24 வயதான கனேடிய இளைஞன் நஸாரினோ டஸ்ஸோன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த வேளையில் சிரியாவில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.