குழந்தைகளுக்கு ஐ.எஸ். தீவிரவாதி தலை வெட்டும் வீடியோ காட்டியவருக்கு ஜெயில் தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் பலமிழந்தது. அதை தொடர்ந்து ஐ.எஸ். என்ற புதியதொரு தீவிரவாத இயக்கம் உருவானது. அவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் மெஜாரிட்டி பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர்.
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி அங்கும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றனர். அவர்களின் அசுர வளர்ச்சிக்கு அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற உலக நாடுகள் தடையாக நின்று தடுத்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் மேற்கத்திய நாடுகள் மீது தீராத கோபத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளனர்.
இருந்தும் சர்வதேச நாடுகளில் ஆங்காங்கே அவர்களது ஆதரவாளர்கள் மறைமுகமாக உள்ளனர்.
அவர்கள் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை கொடூரமாக தலை துண்டித்து கொலை செய்யும் வீடியோ காட்சிகளை குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு காட்டி தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாக புகார்கள் வந்தன.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் கண்காணிப்பு பணி தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஷமிர் கும்ரா (38) என்பவர் குழந்தைகளுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணை கைதிகளின் தலைகளை துண்டிக்கும் வீடியோக்கனை காட்டியது தெரியவந்தது.
எனவே அவரை கைது செய்த போலீசார் நாட்டிங்காம் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குழந்தைகளை தீவிரவாதிகளாக மாற்ற அவர்களுக்கு மூளைச்சலவை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.