ஐரோப்பிய ஒன்றியம் – கனடா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக பரிஸில் ஆர்ப்பாட்டம்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையில் திட்டமிடப்பட்டுள்ள பரந்த பொருளாதார சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) பரிஸில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில், சுற்றுச்சூழல் குழுக்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் அரசியல் எதிர்ப்புக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள பரந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தமானது விவசாயம் மற்றும் பொதுச் சேவைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்பதுடன் ஐனநாயகத்தை சீர் குலைக்கும் என ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வர்த்தக ஒப்பந்தம் மூலம் அதிகளவு தொழில்வாய்ப்புள் ஏற்படுத்தப்படும் என்கின்ற போதிலும் உணவு பாதுகாப்பு, தொழிலாளர்கள் மற்றும் சுகாதார தரங்களில் ஐரோப்பிய நாடுகள் பெரியளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து பிரான்ஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘ இந்த வர்த்தக ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் குடிமக்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க முடியாது. அதேவேளை பொதுமக்கள் முடிவுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும். இதன் காரணமான நாம் ஜனநாயகத்தை இழக்க நேரிடும் என்பதுடன் இதுபோன்ற வேறு ஒப்பந்தங்களுக்கு முன்னுதாரணமாகவும் இது அமையும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக அமைச்சர்களின் முழுமையான ஆதரவு தேவை என்ற வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிரஸல்ஸில் நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் பிரான்ஸ் அரசு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான பரந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் எதிர்வரும் 27 ஆம் திகதி பிறேஸில் தலைநகர் பிரசல்ஸில் கைச்சாத்திடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.