இண்டியன் பிறீமியர் லீக் லீக் 15ஆவது அத்தியாயத்தின் சம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் தனது அறிமுக அத்தியாயத்திலேயே இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் அங்குரார்ப்பண அத்தியாயத்தில் (2008) சம்பியனாகியிருந்தது.
ஷேன் வோர்னின் பயிற்றுவிப்பிலும் தலைமையிலும் ஐபிஎல் வரலாற்றில் முதலாவது சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ், 14 வருடங்களின் பின்னர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாடுகிறது.
ஷேன் வோர்ன் மறைந்த 2 மாதங்களின் பின்னர் இறுதிப் போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் றோயல்ஸ், சம்பியன் பட்டத்தை சுவீகரித்து தனது வெற்றியை ஷேன் வொர்னுக்கு சமர்ப்பணம் செய்யும் என கருதப்படுகிறது.
10 அணிகள் பங்குப்றறிய இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும் சஞ்சு செம்சன் தலைமையிலான ராஜஸ்தான் றோயல்ஸும் முறையோ முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்று ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதி பெற்றன.
இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றிலும் ப்ளே ஒவ் சுற்றிலும் சந்தித்துக்கொண்ட இரண்டு சந்தர்பங்களிலும் குஜராத் டைட்டன்ஸ் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
லீக் சுற்றில் 37 ஓட்டங்களால் ராஜஸ்தான் றோயல்ஸை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ், ப்ளே ஓவ் சுற்றில் முதலாவது தகுதிகாண் போட்டியில் 7 விக்கெட்களால் அமோக வெற்றியிட்டி இறுதிப் போட்டியில் விளையாட முதல் அணியாக தகுதிபெற்றது.
முதலாவது தகுதிகாணில் ராஜஸ்தான் றோயல்ஸ் தோல்வி அடைந்தபோதிலும் ஐபிஎல் போட்டி விதிகளின் பிரகாரம் இரண்டாவது தகுதிகாணில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது.
இரண்டாவது தகுதிகாண் போட்டியில் மற்றொரு பலம்வாய்ந்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ், 7 விக்கெட்களால் மிக இலவாக வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்தாட தகுதிபெற்றது.
இறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டு அணிகளுக்கும் இடையிலான முன்னைய பெறுபேறுகளைக் கொண்டு இன்றைய போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ்தான் வெற்றிபெறும் என அனுமானிக்க முடியாது.
இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் பிரகாசிக்கின்றதோ அந்த அணிக்கு சம்பியனாகும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இந்த இரண்டு அணிகளிலும் இடம்பெறும் வீரர்களின் ஆற்றல்களின் அடிப்படையில் ராஜஸ்தான் றோயல்ஸ் சற்று பலம்வாய்ந்ததாகத் தென்படுகின்றது.
இந்த வருட போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவரும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளிலேயே இடம்பெறுகின்றனர்.
ராஜஸ்தானின் இங்கிலாந்து வீரர் ஜொஸ் பட்லர் 16 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள், 4 அரைச் சதங்கள் உட்பட 824 ஓட்டங்களைக் குவித்து துடுப்பாட்டத்தில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கின்றார்.
பட்லரைவிட சஞ்சு செம்சன் (444 ஓட்டங்கள்), தேவ்தத் படிக்கல் (374), ஷிம்ரன் ஹெட்மயர் (303), யஷஸ்வி ஜய்ஸ்வால் (236) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளனர்.
பந்துவீச்சில் இலங்கையின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் வனிந்து ஹசரங்கவுடன் யுஸ்வேந்தர சஹால் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் தலா 26 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சஹாலைவிட பிரசித் கிருஷ்ணா (18 விக்கெட்கள்), ட்ரென்ட் போல்ட் (15), ரவிச்சந்திரன் அஷ்வின் (12), ஒபெத் மெக்கோய் (11) ஆகியோர் ராஜஸ்தான் றோயல்ஸுக்காக பந்துவீச்சில் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குஜராத் டைட்டன்ஸ் துடுப்பாட்டத்தில் ஹார்திக் பாண்டியா 453 ஓட்டங்களுடன் முன்னிலையில் இருக்கிறார். அவரை விட டேவிட் மில்லர் (449), ஷுப்மான் கில் (438), ரிதிமான் சஹா (312), ராகுல் தெவாட்டியா (217) ஆகியோர் அதிகபட்ச பங்களிப்பு வழங்கியள்ளனர்.
பந்துவீச்சில் மொஹமத் ஷமி (19 விக்கெட்கள்), ராஷித் கான் (18), லொக்கி பேர்கசன் (12), யாஷ் தயாள் (10) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
அணிகள் விபரம் (பெரும்பாலும்)
ராஜஸ்தான் றோயல்ஸ்: யஷஸ்வி ஜய்ஸ்வால், ஜொஸ் பட்லர், சுஞ்சு செம்சன் (தலைவர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், ட்ரென்ட் போல்ட், ஒபெட் மெக்கோய், யுஸ்வேந்த்ர சஹால், ப்ராசித் கிருஷ்ணா.
குஜராத் றோயல்ஸ்: ஷுப்மான் கில், ரிதிமான் சஹா, மெத்யூ வேட், ஹார்திக் பாண்டியா (தலைவர்), டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ராஷித் கான், சாய் கிஷோர், யாஷ் தயாள், லொக்கி பேர்கசன், மொஹமத் ஷமி.