நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் நாம் சந்தித்து வரும் இன்னல்கள், இடர்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் விரத வழிபாடு தான் வாராஹி வழிபாடு.
சப்த மாதர்களில் ஐந்தாவதாகத் தோன்றியவள் தான் வாராஹி. இவளே சேனாதிபதி. இவள் விஷ்ணு அம்சம். பாண்டவர்களின் கிருஷ்ண பரமாத்மா போன்று நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்த ஐந்தாவது தினம் பஞ்சமி திதி வருகிறது. இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்து அருள்வாள் வாராஹி என்பது ஆன்றோர்களின் வாக்கு. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் நாம் சந்தித்து வரும் இன்னல்கள், இடர்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் விரத வழிபாடு தான் வாராஹி வழிபாடு.
அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, நம் வீட்டிலிருக்கும் பூஜையறையிலேயே விளக்கேற்றி முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். காமாட்சி அம்மன் விளக்குடன் பஞ்சமுக தீபம் (குத்து விளக்கு) ஏற்றுவது நலம் பயக்கும். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பூஜையைத் துவக்கவேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.
நம் வேண்டுதல்களை நிறைவேற்ற சங்கல்பம் செய்து, எளிய ஸ்லோகங்களில் அம்மனை ஆராதனை செய்யலாம். தூப, தீபங்கள் காட்டிய பின் பச்சை கற்பூரம் கலந்த பால், தோலுடன் கூடிய உளுந்தில் வடை, வெண்ணெய் சேர்த்த தயிர்ச் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து நைவேத்தியம் செய்து வழிபட விரைந்து அருள் செய்வாள் வாராஹி.
மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று வாராஹியை தரிசனம் செய்து, விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, வாழ்வை மங்களகரமாக்கவும், நம் வேண்டுதல்கள் நிறைவேறவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். தேங்காயில் விளக்கேற்றி விரத வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் விரதம் இருந்து வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தருவாள் வாராஹி.
முதல் மாதத்தில் எந்த இடத்தில் பூஜையை ஆரம்பித்தமோ அதே இடத்திலேயே தொடர்ந்து பூஜைகள் செய்வது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். வாராஹியை விரதம் இருந்து வழிபடுகின்ற அன்றைய தினம் குறைந்தது ஐந்து பேருக்காவது அன்னதானம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். பானகம், நீர் மோர் வழங்கிட பானகத்தில் உள்ள வெல்லக்கரைசல் போல் குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் நம் வாழ்வை வளமாக்குவாள் வாராஹி……
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]