மனித உரிமை விவகாரங்களில் ஐநாவுடன் ஒத்துழைத்தமைக்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் மக்கள் பழிவாங்கல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கும் புதிய அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அரச மற்றும் அரசு சாராத தரப்பினரால் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களிற்குள்ளாகியுள்ளனர் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் கட்டுப்படுத்தும் சட்டங்கள் மூலம் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் இணையவெளியிலும் அதற்கு அப்பாலும் கண்காணிக்கப்படுகின்றனர் என புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பொறிமுறைகளுடன் ஒத்துழைத்தவர்கள் மனித உரிமை மீறல்களிற்காக நீதி பெறுவதற்காக ஆதாரங்களை வாக்குமூலங்களை தகவல்களை பரிமாறுவதற்காக ஐநாவின் நடைமுறைகளை பயன்படுத்தியவர்கள் பழிவாங்கப்பட்ட அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களை ஐநாவின் அறிக்கை பதிவு செய்துள்ளது.
ஐக்கியநாடுகளுடன் ஒத்துழைக்க முயன்றவர்கள் அல்லது ஒத்துழைத்ததாக கருதப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கல் காரணமாக பல நாடுகளில் தனிநபர்கள் அல்லது குழுக்கள் ஐநாவுடன் ஒத்துழைப்பதை தவிர்த்துக்கொண்டுள்ளனர் அல்லது தங்கள் பெயர் விபரங்களை வெளியிடாமலிருந்தால் மாத்திரம் தகவல்களை வழங்க இணங்கியுள்ளனர்.
ஐநாவின் உறுப்புநாடுகள் பழவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை என வாக்குறுதியளித்துள்ள போதிலும் இது தொடர்பில் தங்கள் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள போதிலும் ஐநாவுடன் தங்கள் மனித உரிமை கரிசனைகளை பகிர்ந்துகொண்டமைக்காக மக்கள் எவ்வளவு தூரம் துன்புறுத்தல்களிற்குள்ளாகியுள்ளனர் என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது என மனித உரிமை விவகாரங்களிற்கான உதவி செயலாளர் நாயகம் இல்சே பிரான்ட்ஸ் ஹௌரீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கின்றது பழிவாங்கல்கள் குறித்த பல சம்பவங்கள் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.