அரசாங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனையை கொள்கையளவில் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதைப் போன்ற அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஒரு சட்ட நிறுவனத்தை நிறுவுவது அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை கொள்கையளவில் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் சட்ட பூர்வ தன்ன்மையற்ற ஒரு விடயமாகவே அரசாங்கம் இதனை சமர்ப்பித்துள்ளது. பாராளுமன்றக் குழுவின் பிரகாரம் அமைந்த தற்காலிக ஏற்பாடு மாத்திரமே இதுவாகும். இதன் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து குறிப்பிடப்படவில்லை.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தேவையான இணக்கப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. அது பாராளுமன்றத்தில் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. அன்று பசில் ராஜபக்சவுடன் ஜனாதிபதி கொண்டிருந்த கருத்தியல் ரீதியான வேறுபாடு குறித்து சிந்திக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், நிதி தொடர்பான மரபுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றம் அறிந்திருக்க வேண்டும். அப்போதைய நிதியமைச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை.ஜனாதிபதியும் அன்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார். ஆனால் இன்று என்ன நடக்கிறது?
நாட்டின் நிதி தொடர்பான இணக்கப்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிய நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இன்று என்ன நடக்கிறது? அதுபற்றி எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. பிரிட்டன் போன்ற நாடும், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் முக்கியமான விடயங்களை சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சிகளிடமும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக் குழுக்களிடமும் தெரிவிப்பது ஜனநாயக நாடுகளின் பாரம்பரியமாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்ததை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்களை ஏமாற்றிய பழைய ஆட்சியின் நீட்சியை முன்னெடுக்கவே அரசு முயற்சிக்கிறது. இது வெறும் பாராளுமன்ற தெரிவுக்குழு மாத்திரமே. அதன் அமைப்பையும் நம்பகத்தன்மையை பார்க்கும் போது சிக்கல் உள்ளது. சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் பற்றி எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை.அதிகாரமற்ற அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் மூலம் ஆளும் தரப்பின் நோக்கமும் இத்தகைய உண்மைகளிலிருந்து தெளிவாகிறது.
பெயரளவில் இந்தத் திருத்தங்களை கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் என்ன எதிர்பார்க்கிறது? சர்வதேச அளவில் நமது நாடு தொடர்பான மதிப்பீடு சிறப்பாக அமையவில்லை. அதனை மூடி மறைக்கவா இந்த அரசாங்கம் முயல்கிறது? அவர்கள் நேர்மையாக இருந்தால்,உண்மை இருந்தால், ஒரு சட்ட ரீதியான அமைப்பாகவே இது நிறுவப்பட வேண்டும். அதை விடுத்து உலகையும், நாட்டையும், பாராளுமன்றத்தையும் ஏமாற்றும் முயற்சியாகவே நாம் இதை பார்க்கிறோம்.
தேவையற்ற சட்டபூர்வமற்ற குழுக்களில் எதிர்க்கட்சிகள் கூட அங்கம் வகிக்கிறது என கூறி எமக்கு முத்திரை குத்தவே பார்க்கின்றனர். இந்த ஏமாற்று வித்தையில் நாம் விழ மாட்டோம். இந்த யோசனை சிறந்ததாகும். ஆனால் அதிகாரம் கொண்ட ஒரு சட்ட நிறுவனம் நிறுவப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள 21 ஆவது திருத்தச் சட்டத்தில் போன்ற அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஒரு சட்ட நிறுவனத்தை நிறுவுவது அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.