தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை மக்களின் கல்வியை பறிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது,
“சமூக நீதியை அழிக்கக்கூடிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவருவதற்கு திட்டம் தீட்டுகின்றது.
கல்வியின் தரத்தை மேம்படுத்தாமல் அதனை அழிக்கக் கூடியதாகவே புதிய கல்விக் கொள்கை வரைவு உள்ளது.
அந்தவகையில் உலகத்தில் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய நாடுகளில், ஒரு குழந்தை தனது 7 ஆவது வயதில்தான் கல்வி கற்பதற்குச் செல்கின்றது. ஆனால், இந்தியாவில் 3 வயது குழந்தை தகுதித் தேர்வு எழுதவேண்டும் என்கிறது தேசிய கல்விக் கொள்கை.
தமிழகத்தில் பல்வேறு மதம், வழிபாடு இருக்கலாம். ஆனால் எங்களின் சரித்திரம், நம்பிக்கை, வழிபாடு, கலாசாரம், பண்பாடு பற்றி அறியாதவர்கள் உருவாக்கியுள்ள இந்த கல்விக் கொள்கை எந்த விதத்திலும் பயனளிக்காது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டுமென தமிழகம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், எவ்வாறு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியும்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.