மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (1) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,
மேல்மாகாணத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில், 2,300 தகுதி வாய்ந்த பரீட்சார்த்திகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் 2700 வெற்றிடங்கள் நிலவுகின்றன. மொத்தம் 5453 வெற்றிடங்கள் காணப்படுவதால், எஞ்சிய ஆட்சேர்ப்புகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று நாட்டில் 40ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்றனர்.தொழில் இல்லாமல் வீதியில் இருக்கும் இந்த பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன? இவர்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரீட்சை நடத்தி, பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும் ஆசிரியர் வகையின் அடிப்படையிலுமே ஆரம்பகட்டமாக 2400 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
பரீட்சையில் சித்தியடைந்த ஏனையவர்கள் தொடர்பில் இந்த நாட்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் அவர்களுக்கும் நியமனம் வழங்க முடியும் என நம்புகிறேன்.
அதேநேரம் விஞ்ஞானம். கணிதம். தொழிநுட்பம், ஆங்கில பாடங்களுக்கு 2700 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக பரீட்சை நடத்தி முடித்திருக்கிறோம்.
இந்த வாரத்துக்குள் அவர்களுக்கு அதன் பெறுபேறுகளை வெளியிட இருக்கிறோம். அவர்களுக்கு கல்வி அமைச்சின் கீழ் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம்.
இதற்கு மேலதிகமாக நீதிமன்ற உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால 13ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 9 மாகாணங்களிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் விரைவாக அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.