ஏகாதசி விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் ! என்று அருளினார் பகவான் கிருஷ்ணர்.
ஒவ்வொரு ஏகாதசி விரதமும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று பிரிப்பது இந்து மதத்தின் மரபு. இவர்கள் கண்டிப்பாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால்தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயர். அன்றிலிருந்து தான் இந்த ஏகாதசி ஆரம்பமாகி உள்ளது.
உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசி தான் முதலில் வரும் என்பதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்னதாக வரலாம்.
வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக கருதக் கூடாது.
திங்கள், சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதிக சிறப்பு வாய்ந்தவை ஆகும்.