பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததற்காக, நடிகரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆளுநருக்கு ஆதரவாகப் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அந்தப் பதிவை நீக்கிய அவர், அடுத்தவரின் கருத்தைப் படிக்காமல் ஷேர் செய்துவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கோரினார். எஸ்.வி.சேகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும். அவர்மீது பல்வேறு இடங்களில் புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிந்துள்ளனர். பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அவரிடம் விரைவில் இதுகுறித்து விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.