பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், எஸ்.பி.பி சுயநினைவுடன் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்பட்டுள்ளது.
அவர் மயக்க நிலையில் இருந்து 90 சதவீதம் மீண்டதாக வெளியான செய்தி, அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
தொடர்ந்து, ‘ரோபோடிக்’ உதவியுடன் ‘பிசியோதெரபி’ அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நிலை சீராக உள்ள நிலையில், வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.’சுயநினைவுடனும், சொல்வதை புரிந்து கொள்ளவும் அவரால் முடிகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.பி. மகன் சரண் கருத்து தெரிவிக்கையில் நேற்று மதியம் மருத்துவமனைக்கு சென்றேன். என்னிடம் ஏதோ சொல்ல, எழுதிக் காட்ட நினைத்தார். ஆனால், அவரால் பேனாவை சரியாகப் பிடிக்க முடியவில்லை.இருப்பினும், இந்த வாரத்தில் பேனாவை பிடித்து எழுதிக் காட்டுவார் என நம்புகிறேன். அவர் இசை கேட்கிறார்; விரல்களை அசைக்கிறார். பாட முயல்கிறார். இவை அனைத்தும், அப்பா மீண்டு வருவதற்கான நல் அறிகுறிகள்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.