சீனாவின் குய்லின் பகுதியைச் சேர்ந்த ஒருவர், பல லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை நெகிழச் செய்துவிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கை இறந்து போனபோது, இவரது அம்மா மிகவும் உடைந்து போனார். துக்கத்திலிருந்து மீள முடியாமல், மனநிலை பாதிப்பும் ஏற்பட்டது. மருத்துவம் செய்து பார்த்தார். எந்த மருந்தாலும் அவரது மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. அவரது வருத்தம் மறைந்தால்தான், குணமாவார் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அம்மாவின் வருத்தத்தைப் போக்குவதற்கு என்னென்னவோ செய்து பார்த்தார் இவர். வேறு வழியின்றி ஒரு நாள், தங்கையின் உடையை எடுத்து போட்டுக்கொண்டு, தலையை அலங்காரம் செய்துகொண்டு அம்மாவிடம் வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மாவின் முகத்தில் புன்னகை தெரிந்தது. தன் மகளின் பெயராலேயே இவரை அழைக்க ஆரம்பித்தார் அம்மா. பெண்களின் ஆடையை அணியாதபோது மீண்டும் உடல்நலம் குன்றிவிடுவார் அம்மா. அதனால் கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் ஆடைகளையே அணிந்து வருகிறார் இவர். “என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டலாக சிரிப்பார்கள். எதைப் பற்றியும் நான் கண்டுகொள்வதில்லை. பெண்கள் ஆடை அணிவதால் சங்கடமாக இல்லையா என்று கேட்காதவர்கள் இல்லை. இதில் என்ன சங்கடம் இருக்கப் போகிறது? நான் பெண்கள் உடை அணிவதை எந்தவிதத்திலும் இழிவாக நினைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை இது ஒரு உடை, அவ்வளவுதான். என் அம்மா இருபதாண்டுகளாக எல்லோரிடமும் என்னை மகள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் மகளாக இருப்பதால்தான் அவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத்தனை காலம் உயிருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதைவிட ஒரு மகனுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?” என்று கேட்கும் இந்த மனிதரின் வீடியோ, சமீபத்தில் வெளிவந்து பல லட்சக்கணக்கானவர்களின் அன்பை சம்பாதித்துவிட்டது.
எவ்வளவு பாசமான மகன்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் 52 வயது வின்னி ஜோன்ஸ், வேட்டையாடுவதில் வல்லவர். முன்னாள் கால்பந்தாட்ட வீரர், நடிகராகவும் இருக்கிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் இறந்துபோன நூறு நரிகளின் புகைப்படத்தை வெளியிட்டு,
‘இதை யாராவது முறியடிக்க முடியுமா?’ என்றும் கேட்டிருந்தார். இணையம் முழுவதும் ஜோன்ஸுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கண்டனங்கள் வலுக்கவே, அந்தப் புகைப்படத்தை நீக்கினார் ஜோன்ஸ். “நான் வேட்டையாடுவதில் சிறந்தவன்தான். ஆனால் நூறு நரிகளை ஒரு நாளும் வேட்டையாடியதில்லை. என் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். இதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்? பிரிட்டனில் நரிகளை வேட்டையாடுவதற்கு சட்டப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இரவில் வேட்டைக்குச் சென்றால் அதிகபட்சம் 6 நரிகள் வரை சுட்டிருக்கிறேன். அதற்கு மேல் நான் செய்ததில்லை. இந்த நரிகளும் மக்கள் நடமாடும் இடங்களில் புகுந்து, அவர்களுக்கு தொல்லை விளைவிப்பவை. நான் வேட்டையாடுவதன் மூலம் கிராம மக்களுக்கு நல்லதைச் செய்திருக்கிறேன். மற்றபடி என் கணக்கில் வெளியான புகைப்படத்தை, மற்றவர்களைப் போலவே நானும் பார்த்து அதிர்ந்து போனேன்” என்கிறார் வின்னி ஜோன்ஸ்.