இலங்கையில் மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்கால முறைகேடுகள் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த சிறப்பு விவாதத்தின் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
‘முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு, மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களின் குடியியல் உரிமைகளை பறிக்கும் வகையில், அரசியலமைப்பின் 81 ஆவது பிரிவில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு திருத்தம் செய்வதற்கு கட்சித் தலைவர்கள் தயாரா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, எந்தவொரு நபரினதும், குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கான நகர்வுகளுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைக்காது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் நியாயமற்ற வகையில் பறிக்கப்பட்டது. எனவே எவருடைய குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் நாங்கள் விரும்பவில்லை. தவறு செய்தவர்களை சட்டரீதியாக கையாளலாம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவினதோ அல்லது வேறு எவருடையதோ குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு, தமது கட்சி துணை நிற்காது என்று ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் தெரிவித்துள்ளார்.