பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் இனியும் அரசியல் நடத்தக்கூடாது என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது, எனினும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசும், மாநில அரசும், ஆளுநரும் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நடிகர் விஜயகாந்த் கோரியுள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிப்பது குறித்த பரிந்துரையை, மாநில ஆளுநருக்கு அனுப்ப கடந்த 9 ஆம் திகதி தமிழக அமைச்சரவை தீர்மானித்தது.
1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன், அதில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து, ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் எனவும், ஆளுநர் பரிசீலித்து இறுதி முடிவை அறிவிப்பார் எனவும் உச்சநீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி அறிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.