எழுக தமிழ் பேரணி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கின்றது
இந்நிலையில் பேரணி ஆரம்பிக்கப்படவுள்ள யாழ். நல்லூர் முன்றலை நோக்கி மக்கள் படையெடுத்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள், பொது மக்கள் என பலரும் நல்லூர் முன்றலில் கூடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் உள்ளிட்டவர்களும் தற்போது குறித்த இடத்திற்கு வருகைதந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் என பலரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.
இதேவேளை, சில மருந்தகங்கள் தவிர யாழ். நகரின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் பேரணியை முன்னிட்டு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுக தமிழ் பேரணி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பம்..
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் தலைமையில், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, பெருமளவிலான மக்கள், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்துகளில் வருகைதந்த வண்ணமே உள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.