இந்த வருடம் நடைபெறவுள்ள மூன்றாவது லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்.) இருபது 20 கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதுவே எல்.பி.எல்.இன் புதிய உத்தியோகபூர்வ சின்னமாக இருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) அறிவித்துள்ளது.
புதிய எல்.பி.எல். சின்னத்திற்கான அறிமுக வைபவம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன கேட்போர்கூடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.
இந்த வைபவத்தில் ஐபிஜி குழுமத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன், போட்டி ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் சமன்த தொடன்வெல, சின்னம் வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்ற மியூலிக்க வீரமன்த்ரீ, ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, ஸ்ரீலங்கா சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உப்புல் நவரட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த வருட எல்பிஎல் போட்டியில் வழமைபோல் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கோல் க்ளடியேட்டர்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கண்டி பெல்கன்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் மோதவுள்ளன.
இரண்டு கட்டங்களாக முதல் சுற்று போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை நடைபெறும்.
முதல் சுற்று போட்டிகள் ஹம்பாந்தோட்டை, கண்டி, கொழும்பு ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படும்.
இறுதிச் சுற்று போட்டிகள் கொழும்பில் நடைபெறும்.
முதுலாவது தகுதிகாண் (அரை இறுதி) மற்றும் நீக்கல் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளும் டிசம்பர் 21ஆம் திகதியும் இரண்டாவது தகுதிகாண் போட்டி (அரை இறுதி) டிசம்பர் 22ஆம் திகதியும் இறுதிப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதியும் நடைபெறும்.