எல்.டி.டி.ஈ. தற்கொலைத் தாக்குதல் நடாத்தியதற்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடாத்திய தற்கொலைத் தாக்குதலுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதாக இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
சகோதர தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது, பாரிய பயிற்சியொன்று இல்லாமல் இவ்வாறான தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடாத்த முடியுமா? இந்த பயங்கரவாதிகள் இதற்கு எங்கு பயிற்சி பெற்றுள்ளனர் என இராணுவத் தளபதியிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு கூறினார்.
தற்கொலைத் தாக்குதலை நடாத்துவதற்கு இவர்களின் பயிற்சியை விடவும், மனோநிலைதான் இங்கு முக்கியமானது. நாம் எல்.டி.டி.ஈ அமைப்புடன் நடாத்திய 30 வருட யுத்தத்தை விடவும் மாற்றமான ஒன்றாக இது உள்ளது.
புலிகள் அமைப்பினர் தனது தலைவருக்காகவும், அமைப்புக்காகவுமே தற்கொலைத் தாக்குதலில் உயிரை விட்டனர். மாறாக, இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது உயிர்களை விடுவது, தாம் தவறான முறையில் விளக்கம் பெற்றுக் கொண்டுள்ள சிந்தனா ரீதியிலான ஒரு கருத்துக்காகவாகும்.
இந்த சிந்தனா ரீதியிலான போராட்டத்துக்கு உடலியல் ரீதியிலான பலத்தை விடவும், மானசீக ரீதியிலான பலமே முக்கியமாகும். இத்தகையவர்களுக்கு பாரிய பயிற்சிகள் தேவைப்படுவதில்லை.
நான் இவ்வாறு கூறுவதற்கான காரணம் இருக்கின்றது. நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை பார்க்கும் போது, ஹோட்டல் ஒன்றில் வைத்து தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்ய முயற்சி செய்கின்றார். இருப்பினும், அது வெடிக்கவில்லை. மீண்டும் அவர் பள்ளிவாயலுக்கு சென்றுவிட்டு, தெஹிவளை விடுதிக்குள் செல்கின்றார். அங்கு இதனை வெடிக்கச் செய்யும் விதமாக தயார் செய்யும் போதே வெடித்திருக்கும் என ஊகிக்க முடியுமாக உள்ளது.
விடுதியில் இதனை செயற்படுத்தக் கூடியதாக சரிசெய்யப்பட்டிருந்தால், அருகிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வெடிக்கச் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.
இதிலிருந்து புரிந்து கொள்ள முடியுமான முக்கிய விடயம்தான், இந்த பயங்கரவாதி மனோ ரீதியாக பித்துப் பிடித்தவராக மாறியுள்ளார் என்பதாகும். இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது இவர்கள் பாரிய பயிற்சிகளைப் பெற்றவர்களா? என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.