சமையல் எரிவாயுவிலை எக்காரணம் கொண்டும் அதிகரிப்பட மாட்டாது. இதனால் ஏற்படக் கூடிய நஷ்டத்தை அரசாங்கம் எவ்வழியிலேனும் நிவர்த்தி செய்து கொள்ளும். எனினும் அதனை இறக்குமதி செய்யும் இரு பிரதான நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய வகையில் மாற்று திட்டங்களை செயற்படுத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இரு பிரதான சமையல் எரிவாயு நிறுவனங்களும் எரிபொருள் விலையை 400, 600 மற்றும் 700 ரூபாவால் அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தன. அதற்கமைய நுகர்வோர் விவகார அதிகாரசபை 375 – 400 ரூபா வரையான விலை அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்திருந்த போதிலும் , ஜனாதிபதியும் அமைச்சரவையும் அதற்கு அனுமதிக்கவில்லை.
தற்போதுள்ள நிலைமையில் நுகர்வோர் நலன்கருதி எரிவாயு விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையில் சுமார் 30 – 35 வீதமானோர் எரிவாயு பாவனையாளர்களாவுள்ளனர். இவ் அனைத்து பாவனையாளர்களின் நலன்கருதியே எக்காரணம் கொண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காதிருக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் இரு பிரதான நிறுவனங்களும் ஒரே திட்டத்தின் அடிப்படையில் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து குறைந்தவிலையில் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது.
அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டம் ஏற்பட்டாலும், அதனை எவ்வாறேனும் எதிர்கொள்வோம். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றார்.
http://Facebook page / easy 24 news