சமையல் எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் , அதற்கமைய நேற்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை இடை நிறுத்துவதாக லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
இந்நிலையிலேயே எரிவாயு கப்பலுக்கு செலுத்துவதற்கான டொலர் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நேற்று முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் , நாட்டின் பல பிரதேசங்களிலும் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதே வேளை நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் , எரிபொருள் விநியோகம் வழமைப் போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
எரிபொருளுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணம் விநியோகத்தில் காணப்படும் பலவீனமேயாகும்.
விரைவாக விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
டீசல் கப்பலொன்றுக்குமான 52 மில்லியன் டொலர் கொடுப்பனவும் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான தாமத கட்டணத்தை செலுத்த தேவையில்லை.
இந்த கப்பலிலிருந்து முத்துராஜவெல களஞ்சியசாலைக்கு எரிபொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இங்கு குழாய் மூலம் எரிபொருளை விநியோகிக்க முடியாது. பவுசர்கள் ஊடாகவே விநியோகிக்க முடியும். எனவே தான் விநியோகத்தில் சற்று கால தாமதம் ஏற்பட்டது என்றார்.
இதே வேளை நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த கப்பலுக்கு செலுத்த வேண்டியுள்ள 42 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் பெறாமையின் காரணமாகவே இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
22 000 மெட்ரிக் தொன் டீசல் , 22 000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் என்பவற்றுடன் நாட்டுக்கு வருகை தந்த கப்பலொன்று கடந்த 5 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தாமையின் காரணமாக அதில் காணப்படும் எரிபொருளை தரையிறக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
நாட்டில் தற்போது நாளாந்தம் எரிபொருளுக்கான கேள்வி 9000 மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய வலுசக்தி அமைச்சின் செயலாளர் , இதன் காரணமாகவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நாளாந்தம் 7000 மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் அதிகாலை முதல் இரவு வேளை வரை பெற்றோல் மற்றும் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தொடர்ந்தும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]