எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அது சார்ந்த ஏனை பல உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இன்று செவ்வாய்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரித்துள்ளதோடு , எதிர்வரும் தினங்களில் போக்குவரத்து கட்டண அதிகரிப்பிற்கான கோரிக்கைளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
பேக்கரி உற்பத்திகள்
எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பனிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
கொள்கலன் போக்குவரத்து சேவை சங்கம்
எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைய அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து கொள்கலன் போக்குவரத்து சேவை கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுக சேவையில் ஈடுப்படுபவர்கள் எரிபொருள் விலையேற்றத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கொள்கலன் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ரொஹான் மெனிகேதென்ன தெரிவித்தார்.
அகில இலங்கை வாடகை வாகன சேவை சங்கம்
எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரித்ததாகவும் , இதனால் மக்கள் வாடகை வாகன போக்குவரத்து சேவையினை புறக்கணிப்பதாகவும் அகில இலங்கை வாடகை வாகன சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது என அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உலக சந்தையில் எரி பொருள் விலை குறைவடையும் போது உள்நாட்டில் விலை குறைக்கப்படவில்லை. விலை குறைப்பின் ஊடாக சேமிக்கப்பட்ட நிதி சேமிப்பு நிதியமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மக்களுக்கு அந்நிதியத்தின் ஊடாக நிவாரணம் வழங்க வேண்டும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை வாடகை வாகன சேவையாளர் சங்கத்தின் தலைவர் கசுன் ஜயசிங்க தெரிவித்தார்.