எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலையை மாற்றியமைக்க அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது மிகவும் குறைந்த மதிப்பை எட்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், இன்று மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் எரிபொருட்களின் விலை குறைவடையும் என நுகர்வோர் எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருளின் விலையில் நாளைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே நாளைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஓ.சி நிறுவனத்தின் நிலைப்பாடு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, எண்ணெய் விலையை குறைப்பது தொடர்பான இறுதி முடிவு எரிசக்தி அமைச்சரிடம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் விலையைக் குறைப்பது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று குப்தா கூறியிருந்தார்.