எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான நெருக்கடி நிலைமை காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படாத காரணத்தினால் அதனை பெறுவதில் பலத்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளோம்.
அத்துடன் எரிபொருள் பெறவேண்டுமாயின் அதிகாலை 2 மணிக்கு எழுந்து வரிசையில் நின்று காலை 10 மணி அளவில் எரிபொருள் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமது நாளாந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் 2 கிலோ மீற்றருக்கும் அதிகமான தொலைவில் வரிசையில் நின்று எரிபொருளைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காலையில் தேநீர் கூட அருந்தாமல் பல மணி நேரம் காத்திருந்து எரிபொருளைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை 7 மணிக்குப் பின்னரே எரிபொருள் வழங்கப்படுகிறது.
எனவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வந்தவுடன் மக்களுக்கு உடனடியாக தாமதமின்றி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.