நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மக்கள் எரிபொருளை சேகரித்து வருகின்றனர். இந்த எரிபொருள் சேகரிப்பை தடுப்பதற்காக வாகன இலக்கத்திற்கேற்ப எரிபொருளை வழங்குவதற்கான இணைய செயலி ஒன்றை (APP) அறிமுகப்படுத்தவற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முச்சக்கர வண்டிகள், கார்கள், லொறிகள் உள்ளிட்ட வாகனங்களின் வகைகளுக்கு அமைவாக வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டு ஒரு வார காலத்திற்கான எரிபொருள் நிரப்பப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாகனங்களின் தொடர்புடைய தரவுகளை உள்ளிடுவதற்கும், எந்தவொரு பெற்றோல் நிலையத்திலும் வாகனமொன்றிற்கு எரிபொருள் நிரப்புவதற்கான இணைய பயன்பாடொன்று (APP) தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகன இலக்கத்தையுடைய வாகனத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருளின் விபரம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள கணினியில் உள்ளிட படக் கூடியதாக அமையும் எனவும் அவர் கூறினார்.
உதாரணத்திற்கு முச்சக்கர வாகனமாக இருந்தால், அது தொழில் ரீதியாகவா அல்லது வீட்டு உபயோகத்திற்காகவா என்பது உள்ளிட்ட தகவல்களைப் பெற்ற பிறகே இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும்.
பஸ்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான இந்த திட்டத்தை இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களிலிருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.