நிதி அமைச்சரின் அனுமதி இல்லாமலே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் எரிபொருள் விலை அதிகரிப்பு சட்ட விராேதமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்படுகையுலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதி அமைச்சரின் அனுமதி இல்லாமல் எரிபொருட்களின் விலை அதிகரிக்க முடியாது.
ஆனால் கடந்த 17ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டும்போது நிதி அமைச்சர் நாட்டில் இருக்கவில்லை. அவருக்கு பதில் அமைச்சராக யாரும் நியமிக்கப்பட்டும் இருக்கவில்லை. அப்படியானால் எவ்வாறு விலை அதிகரிக்க முடியும் என கேட்கின்றேன் என்றார்.
இதற்கு மின் சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேகர பதிலளிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.
அதேநேரம் நிதி அமைச்சருக்கும் தொலை பேசி ஊடாக அறிவுறுத்தினோம். எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தி இருந்தோம்.
ஜனாதிபதி, நிதி அமைச்சர், எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடனே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான தொலை பேசி குரல் பதிவு உட்பட அனைத்து பதிவுகளும் இருக்கின்றன என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்த ஹர்ஷடி சில்வா, தொலைபேசி, குறுஞ்செய்தி ஊடாக சட்டம் அமைக்க முடியாது. ஏனெனில் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது.
ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் இல்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு செய்வதற்கு நிதி அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரின் அனுமதி இருக்கவேண்டும். பிரதி நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பதில் நிதி அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை.
அப்படியாயின் எரிபொருள் விலை அதிகரிப்பு சட்டவிராேதம். சட்டத்துக்கு விரோதமாகவே விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது, அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் இல்லை,
எனவே 17ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்க நிதி அமைச்சரின் அனுமதி பெற்றிருந்தால், அதுதொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றார்.
இதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பதிலளிக்கையில், நிதி அமைச்சரின் அனுமதியை சபைக்கு நாங்கள் சமர்ப்பிப்போம் என்றார்.