வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்ட 31ஆவது எம்சிஏ – சிங்கர் சுப்பர் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் அணியை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட CDB சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் வெளிப்பட்ட இறுதிப் போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டது.
அப் போட்டியில் பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் சார்பாக அனுக் பெர்னாண்டோ பெற்ற அரைச் சதம், சிடிபி சார்பாக பவன் ரத்நாயக்க பெற்ற அரைச் சதத்தினால் வீண் போனது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைக் குவித்தது.
அனுக் பெர்னாண்டோ 51 ஓட்டங்களையும் நிமேஷ் விமுக்தி 37 ஓட்டங்களையும் லஹிரு உதார 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லசித் குரூஸ்புள்ளே 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மோவின் சுபசிங்க 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிடிபி 13.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பவன் ரட்நாயக்க 51 ஒட்டங்களையும் சொனால் தினேஷ் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றதுடன் 4 ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினர்.
அவர்களை விட லஹிரு உதார 35 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இம்தியாஸ் ஸ்லாஸா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இறுதி ஆட்டநாயகனாக பவன் ரட்நாயக்க தெரிவானார்.
இதனைவிட சுற்றுப் போட்டியில் ஹேலீஸ் குறூப் வீரர் ரி.எம். சம்ப்பத் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் சிடிபி வீரர் மோவின் சுபசிங்க சிறந்த பந்துவீச்சாளராகவும் தெரிவாகினர்.
சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி நிறுவனத்தின் ஊக்குவிப்புப் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் கே.டி.எஸ். கனிஷ்க, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.
எம்சிஏ தலைவர் மஹேஷ் டி அல்விஸ், பொதுச் செயலாளர் ரொஹான் சோமவன்ச, போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் லக்மால் டி சில்வா ஆகியோர் பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டனர்.