நடிகர் | அருண்விஜய் |
நடிகை | மஹிமா |
இயக்குனர் | சரோவ் சண்முகம் |
இசை | நிவாஸ் கே பிரசன்னா |
ஓளிப்பதிவு | கோபிநாத் |
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் அருண் விஜய், மனைவி மகிமா நம்பியார், தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் மிகவும் சேட்டை செய்பவராக இருக்கிறார். இந்நிலையில், டாக் ஷோவில் பல வெற்றிகளை பெற்றிருக்கும் வினய், கண் தெரியாமல் இருக்கும் குட்டி நாயை தன் ஆட்கள் மூலம் கொல்ல சொல்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குட்டி நாய் அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த குட்டி நாய்க்கு கண் ஆப்ரேஷன் செய்து வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ். ஒரு கட்டத்தில் டாக் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஷோவில் அர்னவ்வின் நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயை போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார்.
இறுதியில் அர்னவ்வின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா?, வினய்யின் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய், தந்தை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். விஜயகுமார் மற்றும் அர்னவ்வுடன் கோபம் மற்றும் பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். அர்னவ் விஜய்க்கு முதல் படம் என்பதால் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், ஒருசில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது. மகிமா நம்பியார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.
ஸ்டைலிஷ் வில்லனாக வரும் வினய்யின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. அர்னவ்வின் நண்பர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
கண் தெரியாத நாய் போட்டிகளில் கலந்து கொண்டு எப்படி வெற்றி பெறுகிறது என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சரோவ் சண்முகம். ஒரு சில காட்சிகள் யதார்த்த மீறல்களாக இருந்தாலும், பெரியதாக தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி திரைக்கதை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் நாயிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதேபோல் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு ஏற்ப கலர் புல்லாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘ஓ மை டாக்’ ரசிக்கலாம்.