என் அம்மாவை சில இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினர்
இலங்கையில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் தமிழர்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டனர் என்பது தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையத்தினால் (CPPHR) இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக சித்திரவதைகளை வெளிப்படுத்தும் வகையில், ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
இலங்கையின் இருட்டறை என்ற (The Dark Corners of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் தமக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாமாகவே விபரிக்கின்றனர்.
அதில் பெற்றோலால் நனைக்கப்பட்ட பொலித்தீன் பைகளால் முகங்களை மூடி தாக்ப்பட்டவர்களும், அசீட் ஊற்றி தாக்கப்பட்டவர்களும், நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களும், முள்ளுப்பற்றைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் உழவு இயந்திரம் மூலம் கட்டி இழுக்கப்பட்டவர்களும், வீட்டில் தங்கியிருந்த போது பிள்ளைகளுக்கு முன்பாக தாயை நான்கு பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதை நேரில் பார்த்த பிள்ளைகள் என பலர் தமது உள்ளக்குமுறல்களை இந்த ஆவணப்படத்தில் வெளிப்டுத்தியுள்ளனர்.
அதில் பெண்ணொருவர் சாட்சியம் அளிக்கையில்,
‘நான் வயதுக்கு வந்து சில நாட்களில் அம்மாவுடன் தனியாக வீட்டில் இருந்தேன். இரவில் இராணுவ அதிகாரிகள் வந்து எனது வீட்டை தட்டினார்கள். நான் கதவை திறந்த போது எனது கழுத்தில் கத்தியை வைக்க உடனடியாக அம்மா என்னை தள்ளி அவர்களிடம் மாட்டிக்கொண்டார். நான் தனி அறையில் இருக்க எனது அம்மாவை மற்றைய அறையில் வைத்து நான்கு பேர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள். எனது எம்மா கதறி அழுதார். என்னை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னை தியாகம் செய்தார். இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது என பெண்ணொருவர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதேநேரம் தனது அப்பாவையும் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட பலர் தமது நேரடி சாட்சியங்களை இந்த ஆவணப்படம் மூலம் பதிவு செய்துள்ளனர்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வெளியிடப்பட இருக்கும் இந்த ஆவணப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.